பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144 ✤ ஒரு பூர்வ பெளத்தனின் சாட்சியம்


என்னும் முனிவன் சாக்கிய அரசனின் அரண்மனைக்கு வருகிறான். “அந்திதேவன் வசிட்டனுக்கு மரியாதை செய்ததுபோல் அவனுக்குச் சிறப்புச் செய்தபின்” அரசன் குழந்தையை அவனிடம் காட்டுகிறான். இளவரசன் “பாதங்களில் சக்கரரேகை இருப்பதையும் கை விரல்களும் கால்விரல்களும் மெல்லிய தசையால் இணைக்கப் பட்டிருப்பதையும் இரண்டு புருவங்களுக்கு இடையே மயிர் வட்டம் இருப்பதையும் ஆண்குறியின் காய்கள் யானைக்கிருப்பன போல் பின்னுக்குத் தள்ளியிருப்பதையும்” முனிவன் கண்டு வியப்படைகிறான். “தேவியின் மடியிலிருந்த அக்னியின் குழந்தையைப்போல் சித்தார்த்தன் இருந்ததைக் கண்டு” அவன் கண்ணீர் வடித்தான் (சரிதம் 13).

அசுவகோசரின் புத்தசரிதத்தில் இயற்கையிகந்த நிகழ்ச்சிகள் ஒதுக்கப்படவில்லை. பொதுமக்களைக் கவரவேண்டி, புத்தரும் அவரைச் சார்ந்தவர்களும் அற்புதங்களை நிகழ்த்தவேண்டியுள்ளது. எதிரிகளை வீழ்த்துவதற்குச் சமயக்கோட்பாடுகளைவிட அற்புதச் செயல்களே அதிகம் பயன்படுகின்றன. காஸ்யபர் என்பவரைப் புத்தர் தம்நெறிக்குக் கொண்டுவந்த பின் மகத நாட்டு மக்கள் பலர் கூடியிருந்த அவையில் அவரது மந்திர ஆற்றலைக்காட்டுமாறு பணிக்கிறார். காஸ்யபரும் பல செப்பிடு வித்தைகள் செய்து மக்களைக் கவர்கிறார்.

“காஸ்யபர் தம்மை ஒரு பறவையாக மாற்றிக்கொண்டு காற்றில் பறந்தார். அதி அற்புத ஆற்றல்களால் வானில் நின்றார்; தரையில் நடப்பதுபோல் வானில் நடந்தார்; படுக்கையில் அமர்வதுபோல் வானில் அமர்ந்தார். பிறகு படுத்தார்.

ஒருசமயம் தீயைப் போன்று ஒளி வீசினார்; ஒரு சமயம் மேகத்தைப்போன்று நீரைக் கொட்டினார்; ஒரு சமயம் தீயைப்போன்று ஒளிவீசி, நீரையும் உடன்கொட்டினார்; மழை பெய்யும் மேகம் போன்றும் மின்னல் கீற்றுகள் போன்றும் காட்சி அளித்தார்.

மக்கள் அவரைப் பார்த்துப் பெருவியப்புற்றனர்; அவர் காது கண்கள் அவரையே உற்றுநோக்கின; அவருக்கு மரியாதை செலுத்தி அரிமா போன்று முழக்கம் செய்தனர்.

அவருடைய வித்தைகளை முடித்தவுடன் புத்தருக்குத் தலைதாழ்த்தி வணக்கம் செய்து, “நான் கடமையை ஒழுங்காகச் செய்த மாணவன்; என்னுடைய தலைவர் புண்ணியமூர்த்தி ஆவார்” என்று கூறினார்” (சரிதம் 21).

புத்தரும் தன் தந்தையைச் சந்திக்கும்போது பலவித்தைகளைச் செய்து காட்டுவதாகப் புத்தசரிதம் கூறுகிறது.