பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ப. மருதநாயகம் ✤ 145

புத்தர், அவருடைய தந்தை இன்னும் அவரைத் தம் மகனாகவே கருதுவதை அறிந்து அவர்பால் இரக்கம் கொண்டு அவருக்காக விண்ணிற்குப் பறந்தார்.

கதிரவனின் தேரைத் தன் கையால் தொட்டார்; விண்ணில் காற்று வீசும் பாதையில் காலால் நடந்தார்; தண்ணீரில் தரையில் நடப்பது போல் நடந்தார்; அமைதியாக மலையை ஊடுருவிச் சென்றார்.

அவருடைய உடலின் ஒரு பகுதியால் மழையைப் பொழிந்தார். இன்னொரு பகுதியால் தீயைப்போல் ஒளிவீசினார்.அவரிடம் பேரன்பு கொண்டிருந்த மன்னனுக்கு இச்செயல்களால் மகிழ்ச்சியூட்டிய புத்தர் விண்ணில் இரண்டாவது கதிரவனைப்போல் வீற்றிருந்து கொண்டு, அவனுக்கு அறத்தைப் போதித்தார் (சரிதம் 44).

செப்பிடுவித்தைகளைக் காட்டியதன் மூலமே மன்னனின் மனத்தைத் தம்பால் திருப்பி, அறவுரை கேட்கும் ஆர்வத்தை அவனிடம் புத்தர் தூண்ட முடிந்தது என்றும் புத்தசரிதம் கூறும் (சரிதம் 45).

புத்தருடைய அற்புதச் செயல்கள் மண்ணுலகில் மட்டுமல்லாமல் விண்ணுலகிலும் நிகழ்த்தப்பெறுகின்றன. பல அறிஞர்கள் கூடி அவரை அற்புதங்கள நிகழ்த்துமாறு கேட்கின்றனர். அவரும் தம் மந்திர ஆற்றலைக் காட்டச் சம்மதிக்கிறார். வேறு சமயக்கோட்பாடுகளைக் கொண்டவர்களையெல்லாம் விந்தைகள் செய்து தோற்கடிக்கிறார். விண்மீன்களிலும் ஒளிவீசும் பரிதிபோல் காட்சி தந்த பின் மூவுலகையும் தாண்டி வானவர் வாழும் இடத்தை அடைந்து தம் தாயைச் சந்தித்து அறவுரைகூறிப் பெளத்த தர்மத்திற்கு அவரை மாற்றுவதாகவும் புத்தசரிதம் கூறும்.

வானவர் உலகத்திலேயே கார்காலத்தில் வாழ்ந்து தேவர்களின் அரசனிடமிருந்து பிச்சையேற்று உண்டு விண்ணுலகங்களிலிருந்து கீழ் இறங்கினார். மன அமைதியை அடையப்பெற்றிருந்த தேவர்கள் தங்களுடைய மாளிகைகளில் நின்றுகொண்டு அவர் செல்வதைத் தம் கண்களால் இறுதிவரை பார்த்தனர். மண்ணுலகிலிருந்த அரசர்கள் விண்ணை நோக்கித் தம் கண்களை உயர்த்தி அவருக்கு வணக்கம் செலுத்தி வரவேற்றனர். வானவர் உலகிலிருந்த அவரது அன்னையையும் வானவரில் விருப்பமுள்ளவரையும் தம் அறத்திற்கு மாற்றிய பிறகு அவர் இவ்வுலகிற்குத் திரும்பினார் (சரிதம் 55-56).

புத்த சரிதத்தின் இறுதிப்பகுதியில் வரும் புத்தர் பெளத்த தன்மத்தைப் பரப்பும்போது அறக் கோட்பாடுகளை எடுத்துச் சொல்வதோடல்லாமல் அவ்வப்போது அற்புதங்களும் நிகழ்த்துகிறார்.