பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14 ✤ ஒரு பூர்வ பெளத்தனின் சாட்சியம்

நாளெல்லாம் கேட்பவன் தனது சகோதரருக்குச் சேர வேண்டிய பாகத்தை அன்புடன் கொடுப்பானா அல்லது விரட்டியடிப்பானா. புராணங்களைப் படிப்பதாலும் கேட்பதாலும் சுகம் உண்டு என்பாராயின், அதுவும் அனுபவத்திற்குப் பொருந்தாது, எங்ஙனமென்னில் எங்கள் சாமி அன்னியன் தாரத்தை இச்சித்து அவளால் குழந்தையாக சபிக்கப் பெற்றார் என்றபோது சாமியே அன்னியன் தாரத்தை இச்சித்துள்ளார் என்னும் கதையைக் கேட்பவன் அவ்விச்சிப்பில் நிலைப்பானா அதனால் உண்டாய கேட்டில் நிலைப்பானா (அலாய்சியஸ் | 430).

நன்மையை விட தீமையே மாந்தர் உள்ளத்தை எளிதில் பற்றி ஈர்க்கும் என்பதைச் சுட்டுகிறார். இவ்வாறே பாமர மக்களை வலை வீசிப் பிடிக்கப் பயன்படுத்தப்பெற்ற எல்லாப் புராணங்களும் உரிய இடங்களில் விமரிசிக்கப் பெறுகின்றன.

பெரிய புராணம் சிறிய புராணங்களைச் சிறுவர்களுக்குக் கற்பிப்பதாயின் சீவகாருண்யம் நிலைத்துக் கொலை செய்யாமை, களவு செய்யாமை, கள்ளருந்தாமை, பொய் சொல்லாமை, பிறர்தாரம் இச்சியாமை என சுத்ததேகிகளாக உலாவும் சன்மார்க்கங்களையும் பெளத்தர்களைச் சீவகாருண்யமற்ற பஞ்சமாபாதகர்களும் துன்மார்க்கர்களும் கூடிக்கழுவிலும் கற்காணங்களிலும் வசியிலும் குத்தி வைத்துக் கொன்ற கதையை அவற்றுள் விசாலமாக வரைந்திருக்கின்றது . . . மற்றும் அக்காதையுள் சாமியே மனிதனாக வந்து ஏது திக்குமற்ற கைம்பெண் கிழவியிடம் சென்று உடைந்த ஏரிக்கரைக்கு மண்ணிடுவதாக ஒப்பந்தம் பேசி அவள் வயிறு பிழைக்க விற்றுண்ணும் புட்டுகளை எல்லாம் தின்றுவிட்டு ஒப்பந்தம் பேசியபடி செய்யாமல் பிரம்படி பட்டதாக வரைந்திருக்கின்றது (அலாய்சியஸ் | 459).

இரணியன் - பிரகலாதன் கதை, பிரகலாதன் என்னும் பிள்ளையைத் தன்வசப்படுத்திக் கொண்டு நாராயண நமோவென்று சொல்லும் தகப்பனாகிய இரணியனை வஞ்சித்துக் கொல்லும் கதையாகப் பண்டிதரால் வாசிக்கப் பெறுகிறது. பின்னால் அயோத்திதாசர் கூறும் கதைச்சுருக்கம் பாரதிதாசனால் “இரணியன் அல்லது இணையற்ற வீரன்” எனும் நாடகமாக உருப்பெற்றது.

எல்லாவற்றிற்கும் மேலாக, படித்தவர்களிடமும் பாமரர்களிடமும் புராணமாகவும் நாடகமாகவும் பெரிதும் பரப்பப்பட்ட அரிச்சந்திரன் கதை “அரிச்சந்திரன் பொய்கள்: அரிச்சந்திரன் மெய்யன் மெய்யன் என்னும் காதையும் பொய்யான விவரமும்” என்ற தலைப்பில் நீண்ட மறுவாசிப்புக்கு உட்படுத்தப் பெறுகிறது. அக்கதையைப் பெளத்தர்களைப் பறையர்களென்று தாழ்த்தி வைத்திருந்த கூட்டத்தார்