பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ப. மருதநாயகம் ✤ 157


வரலாற்றுப் பாத்திரங்களாகவே காட்சி தருகிறார்கள். புத்தர் அவர்களுடைய நெறிக்கு எதிராக ஏதும் பேசாததோடு மட்டுமல்லாமல் அவர்களைப் பாராட்டிப் பேசும் இடங்களும் உண்டு. அசுவகோசர் பிறப்பால் பிராமணர் என்பதால் இவற்றையெல்லாம் தவிர்க்க முடியவில்லையா அல்லது அவையெல்லாம் அவருக்குப் பின்னால் வந்தவர்களால் நுழைக்கப்பட்டவையா என்பது தெரியவில்லை. புத்தர் ஒரு பிராமண மதகுருவைப்போல் பேசும் இடங்களும் உண்டு. தான் ஞானம் அடைந்து விட்டவராதலால் அவருடைய உறவினர்களும் பிறரும் அவரைக் குடும்பப் பெயரைச் சொல்லி அழைக்கக் கூடாது என்கிறார். கங்கையைப் படகில் கடந்தால் தன்னுடைய ஆற்றல் மற்றவர்களுக்குத் தெரியாமல் போய்விடும் என்று தனக்குள் சொல்லிக் கொண்டு அவருடைய அடியவர்களின் படகுகளைப் பயன்படுத்தாமல் ஒரு நொடியில் மாயமாய் அக்கரை அடைகிறார் என்று புத்த சரிதம் கூறும்.

இறப்பை எதிர்நோக்கியிருக்கும் புத்தர் அது கருதி வருந்தும் ஆனந்தருக்கும் மற்றைய அடியவர்களுக்கும் உலகில் எதுவும் நிலையற்றது என்று அறிவுரை கூறுகிறார்.

வசிட்டர், அத்திரி ஆகியோரும் ஏனைய முனிவர்களும் காலத்தின் ஆதிக்கத்திற்குக் கட்டுப்பட வேண்டியிருந்தது. இவ்வுலகில் வாழ்க்கையென்பது அழிவிற்குரியது. உலகின் மன்னனான மாந்தாத்திரி, வாசவருக்கு இணையான வசு, பெருமைக்குரிய நாகபாகர் ஆகிய யாவரும் மூலப்பொருள்களோடு இரண்டறக் கலந்து விட்டனர்.

யயாதி, சிறந்த தேரைப்பெற்ற பகீரதன், பழி பூண்ட குரு வமிசத்தார், ராமர், கிரிராஜர்கள், அஜன் ஆகிய அரச முனிவர்களும் ஏனைய இந்திரனுக்கு ஒப்பான பலரும் அழிவெய்தினார்கள் யாரும் அழிவிலிருந்து தப்பமுடியாது.

பரிதி தன் நிலையிலிருந்து கீழே விழுகிறது; செல்வமுடைய தேவர்கள் கீழிறங்கி இவ்வுலகிற்கு வந்தார்கள்; நூற்றுக்கணக்கான இந்திரர்கள் இறந்து போனார்கள்; யாரும் இறப்பின்றி என்றும் வாழ்தல் என்பது இயலாது. உலகிற்கு அறிவொளி கொடுத்த சம்புத்தர்கள் யாவரும் எண்ணெய் தீர்ந்த விளக்குகளைப்போல் நிர்வாணம் அடைந்தார்கள். எதிர்காலத்தில் ததாகதர்களாகப் போகும் மகாத்மாக்கள் யாவரும் விறகு தீர்ந்த நெருப்புப்போல் நிர்வாணம் அடைவார்கள் (சரிதம் 80).

புத்தசரிதத்தின் இறுதிக் காண்டம் புத்தர் மறைந்த பின் அவருடைய நினைவுச் சின்னங்களுக்காக மல்லர்களுக்கும், அவர்களுடைய நாட்டிற்கருகாமையிலிருந்த ஏழு அரசர்களுக்கும்