பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158 ✤ ஒரு பூர்வ பெளத்தனின் சாட்சியம்


நடந்த போர்பற்றிப் பேசுகிறது. மல்லர்களின் நகரத்தைப் பின்னவர்களின் படைகள் சூழ்ந்து கொள்ள, துரோணன் என்று அழைக்கப்பெறும் பிராமணன் அவர்களுக்குப் போர் செய்தல் தவறென்றும் அமைதி காத்தல் வேண்டுமென்றும் எடுத்துரைத்து மல்லர்களிடம் தூது சென்று அவர்களையும் சமாதானப்படுத்துகிறான். அவர்கள் அவனிடம்,

நீ சொல்வது ஒரு நல்ல நண்பனும் பிராமணனுக்குரிய பண்புகள் கொண்ட ஒருவனும் சொல்லத் தகுந்ததாகும். நாங்கள் தவறான பாதையில் சென்ற தீய குதிரைகளை ஒத்தவர்கள்; நீ எங்களை நல்வழிப்படுத்தினாய் (சரிதம் 121).

என்று அவனுடைய உரையை ஏற்றுப் புகழ்ந்து பகைவர்களோடு ஒத்துப்போவதாக அக்காண்டம் ஒரு பிராமணனின் நற்பண்பையும் நற்செயலையும் முற்படுத்திக் காட்டும்.

அயோத்திதாசர் புத்தரது வரலாற்றைக் கூறும் நூலின் முகப்பில் அதனைப் “பூர்வத்தமிழ் ஒளியாம் புத்தரது ஆதிவேதம்” என்று அழைப்பதும் “இஃது பெளத்த தன்மப் பாலிப் பிரதிகளைக் கொண்டும், தமிழ்ப் பிரதிகளைக் கொண்டும் பரம்பரை சுருதி வாக்கியங்களைக் கொண்டும் எழுதப்பெற்றது” என்று குறிப்பிடுவதும் பொருள் பொதிந்த கூற்றுகளாகும். அவர் வடமொழியிலுள்ள அசுவகோசரின் புத்த சரிதத்தை மூலங்களில் ஒன்றாகச் சேர்க்கவில்லை. அசுவகோசரை வேறு சில இடங்களில் தமது கட்டுரைகளில் சுட்டுகிறார். அவர் எழுதிய நூலிலிருந்து பல கருத்துக்களை தரும் அவர் ஏன் புத்தசரிதத்தைக் கண்டு கொள்ளவில்லை என்பது ஒரு புதிராக உள்ளது. அது அவருக்குக் கிடைக்கவில்லையா அல்லது அதனைப் படித்து அதன் பிராமணச் சார்பு கருதி ஒதுக்கினாரா என்று முடிவு கட்டுவதற்குப் போதிய ஆதாரங்கள் இல்லை. எனினும் புத்தர் வரலாற்றிற்கும் புத்த அறத்தை விளக்குதற்கும் பெரும்பாலும் தமிழ் இலக்கியங்களையே சான்று ஆதாரங்களாகக் கொள்கிறார் என்பது நூலை ஒரு முறை படிப்பார்க்கும் தெளிவாகும். பாலி நூல்களிலிருந்தும் ஆங்காங்கே மேற்கோள்கள் தருகிறார். வடமொழி அறிந்தவராயிருந்தும் அம்மொழி நூல்களான வேதங்களையும் உபநிடதங்களையும் மனு சாத்திரத்தையும் மேற்கோள்கள் பல காட்டிக் கண்டிக்கின்றாராயினும் புத்த தன்மத்தை விளக்க அவற்றைப் பயன்படுத்தவில்லை யென்பதால் அவை பொய்யும் புரட்டும் மிகுந்தவை என்று கருதியே புறக்கணித்தார் என்ற முடிவுக்கு வரலாம்.

“ஆதி வேதத்திற்கு” அயோத்திதாசர் எழுதிய பாயிரத்தில் தாம் எவற்றை மூலங்களாகக் கொண்டாரென்பதற்கான பட்டியலைத் தருகிறார்.