பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

166 ✤ ஒரு பூர்வ பெளத்தனின் சாட்சியம்


மாரனை வெல்லுதல் என்ற தலைப்புகளில் சித்தார்த்தன் புத்தராதற்கு முன் நடந்தனவற்றைப் பதிமூன்று காண்டங்களில் கூறிவிட்டுப் பதினான்காம் காண்டத்தில் அவர் ஞானம் அடைந்ததைச் சொல்லும் வடமொழிக்காப்பியம் நிகழ்ச்சிகளிலும் உரையாடல்களிலும் கவனம் செலுத்த, ஆதிவேதம் தமிழ் இலக்கியங்களைப் பின்பற்றி வாழ்க்கைக்குரிய நெறிகளைப் புத்தரின் வாயிலாக விளக்கிச் செல்லும்.

புத்தர் ஆதிவேதம் என்னும் மூன்று பேத வாக்கியங்களையும் அவற்றோடு வீட்டையும் சேர்த்து நான்கு வாக்கியங்களுக்கும் முப்பத்திரண்டு உப நிடதங்களையும் வழங்கினார் என்றும் பிம்பாசார நகரத்துள் சென்று அதன் மன்னனின் மூலம் தசபாரமாம் பாரதப்பத்தைப் பாறையில் பதியச் செய்தார் என்றும் தாசர் எடுத்துரைப்பார். எல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்டல், ஏழையர்க்கு ஈதல், மனத்தை அடக்கல், நல்லொழுக்கத்தைக் கடைப்பிடித்தல், பிறன்மனை விரும்பாதிருத்தல், பிறர் பொருளைக் களவாடாதிருத்தல், பிறவுயிர்களுக்குத் தீங்கு செய்யாதிருத்தல், அறிவை மயக்கும் பொருள்களை அருந்தாதிருத்தல், பொய்சொல்லி வஞ்சியாதிருத்தல், காம வெகுளி மயக்கங்களை அகற்றல் ஆகிய பத்தையும் தசபாரங்கள் என்றழைத்துப் “பாரதம் பத்தும் பாறைப்பதிந்து சீரது தந்தான் சினன்” என்று பாரதப் பத்திலிருந்து மேற்கோள் காட்டுவார் தாசர்.

விநாயகர் என்னும் புத்தபிரான் பாரதத்தை மலையில் எழுதியுள்ளாரென்பதும் மகா புராண பாடம் பாரதமென்பதும் தச பாரமென்பதும் பாரமிதமென்பதும் செய்யுட்களாய் இராது. வாசக நடையில் எழுதியுள்ள தசசீலத்தின் பெயராம் (ஆதிவேதம் 49).

புத்தரை விநாயகர் என்றழைப்பதற்கு ஆதாரமாகப் பின்கலை நிகண்டிலிருந்து,

தருமராசன், முநிந்திரன், சினன் பஞ்சதாரை விட்டே அருள் சுரந்து அவுணர்க் கூட்டும் ததாகதன் ஆதிதேவன் விரவு சாக்கையனே சைனன் விநாயகன் சினம் தவிர்ந்தோன் அரசு நீழலில் இருந்தோன் அறி அறன் பகவன் செல்வன்

எனும் பாடல் வரிகளைத் தாசர் சுட்டுவார் (ஆதிவேதம் 49).

அசுவகோசரின் புத்தசரிதமும் புத்தரை விநாயகர் என்று அழைப்பது குறிப்பிடற்குரியது (புத்தசரிதம் 56).

“சதுர்சத்ய காதை” யில் பிறப்பு, பிணி, மூப்பு, சாக்காடு ஆகிய நான்காலும் துக்கமுண்டாமென்பது சத்தியம் என்றும் துக்கம்,