பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16 ✤ ஒரு பூர்வ பெளத்தனின் சாட்சியம்

சொல்லியிருப்பது மூன்றாவது பொய். புத்த சங்கத்தில் சேர்ந்து ஒழுக்கத்தில் நிற்கப் பார்க்கும் மக்கள் பார்ப்பாரென்று அழைக்கப் பெற்றார். அவர்கள் பல நாடுகளிலும் பரவியிருந்தனர்.

ஒரு காட்டில் விழுந்து கிடந்த குழந்தையை இன்னசாதி என்றறியாது பிராமணர் எடுத்து வளர்த்ததாகவும் காரணமின்றிக் கபிலர் என்று பெயர் வைத்ததாகவும் சொல்லியிருப்பது நான்காவது பொய். பிறப்பில் சாதியில்லையென்று கருதிய கபிலர் பறையர் வீட்டில் ஒளவை வளர்ந்தாள் என்றும் அந்தணர் வீட்டில் கபிலர் வளர்ந்தாரென்றும் சொன்னாரென்பது ஐந்தாவது பொய். புத்தபிரான் காலத்திற்கு முன்பே வேஷ பிராமணர்களும் அவர்களுடைய வேதங்களும் வேதாந்தங்களும் சாதி பேதங்களும் இருந்தனவென்று கூறித் தங்களைச் சிறப்பித்துக் கொள்ள இத்தகைய பொய் மலிந்த கதை எழுதியுள்ளார்கள் என்பது அயோத்திதாசரின் கண்டனம் (அலாய்சியஸ் | 1150-152).

அயோத்திதாசர் காலத்தும் அவர் காலத்துக்குச் சற்றுப் பின்னும் மேலை நாடுகளில் பல பேரறிஞர்கள் பெளத்த சமயத்தின் சிறப்புணர்ந்து அதன் பெருமையைப் பரக்கப் பேசினர். ஹார்வர்டு பல்கலைக் கழகத்துப் பேராசிரியர்கள் பால் எல்மர் மோர் (Paul Elmer More), இர்விங் பாபிட் (Irwing Babbit) போன்றோரின் தாக்கத்தினால் இருபதாம் நூற்றாண்டின் இலக்கியச் சர்வாதிகாரி (Literary Dictator) என்று கருதப்பெறும் டி.எஸ்.எலியட் பெளத்த சமயத்தில் நாட்டம் கொண்டு அதனைத் தழுவவும் ஆர்வம் கொண்டிருந்தார் என்றும் ஆனால் பின்னால் ஆங்கிலோ கத்தோலிக்கர் (Anglo-Catholic) என்று தம்மை வெளிப்படுத்திக் கொண்டார் என்றும் அறிகிறோம். இந்தியாவிலும் தாகூர், குமாரன் ஆசான் போன்றோர் தமது கவிதைகளில் பெளத்தத்தைப் பாராட்டினர். ஆனால் உதட்டளவில் அல்லாது உள்ளத்து அளவில் அதனை முற்றுமாக ஏற்றுக் கொண்டு அதனோடு தம்மை இரண்டற இணைத்துக் கொண்டவர் அக்காலத்தில் அயோத்திதாசரே. அது தாழ்த்தப்பட்டவர்களுக்குச் சமய சஞ்சீவியாக உதவும் என்பது அவர் முழு நம்பிக்கையாயிற்று.

இருக்கு, யஜுர், சாம, அதர்வண வேதங்களென்று இப்பொழுது சுட்டப்படுபவை உண்மையான ஆதி வேதங்கள் அல்லவென்றும் பழந்தமிழ் இலக்கியங்கள் மறை என்றும் முதல் நூல் என்றும் குறிப்பவை வேறென்றும் அயோத்திதாசருக்குப் பின் வந்த தமிழ் அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவரே அவை புத்தரது ஆதிவேதமென்றும் இதற்குத் தமிழிலுள்ள பஞ்ச காவியங்களும், பாலி மொழியிலுள்ள பிடகங்களும் திராவிட பெளத்தருடன் காலங்