பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

182 ✤ ஒரு பூர்வ பெளத்தனின் சாட்சியம்


சுதேசிகள்”, “நமது ஆங்கிலேய மித்திரர்கள்”, “ஸ்ரீ பாரத தேச தாஸர்களின் பக்தி” போன்ற தலைப்புகளில் அமைந்திருப்பது பாரதி தேர்ந்தெடுத்துக் கொண்ட பாடுபொருள்கள் அவர் கையாளும் நடை பற்றி நாம் அறியத் துணை செய்யும். அவர் காலத்தவர் எழுதி வந்த வடமொழி மிகக் கலந்த தமிழில் இருக்கும் அவர் கட்டுரைகள், அவருடைய கவிதை தரும் இன்பத்தில் ஊறித் திளைத்தவர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தையே அளிக்கும்.

இராமசாமி முதலியார் “சென்னை ஸ்வராஜிஷ்டுகள்”, “சட்ட ஆலாசனை உறுப்பினர்”, “சமுதாயச் சிக்கல்கள்”, “பணி அமர்த்தும் நிறுவனங்கள்”, “அரசியல் சட்டப் பிரச்சனைகள்”,“வைஸ்ராய்” ஆகிய தலைப்புகளில் எழுதிய கட்டுரைகள் யாவும் கல்வி கற்ற பிராமணர், பிராமணர் அல்லாதார் ஆகிய இரு சாரார் அரசு அலுவலகங்களில் பதவிக்காக நிகழ்த்தி வந்த போராட்டங்களையே மையமாகக் கொண்டவை. உயர் பதவிகள் யாவும் பிராமணர்களால் கைப்பற்றப்படுதலையும் பிராமணர் அல்லாதவர் தகுதி பெற்றிருந்தும் ஆங்கில அரசால் புறக்கணிக்கப்படுவதையும் சில குறிப்பிட்ட பிராமணத் தலைவர்கள் வஞ்சகமான முறையில் எல்லா நலன்களையும் பெற்று வருவதையும் சுட்டிக் காட்டுபவை. அரசுத் துறைகளில் மட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சியிலும் இந்து மகாசபை போன்ற நிறுவனங்களிலும் அவர்கள் செலுத்திய ஆதிக்கத்தைக் கடுமையாகக் கண்டிப்பவை. குறிப்பிடத்தக்க அரசியல் நிகழ்ச்சிகள், தலைவர்கள் பற்றியும் சட்டநுணுக்கங்கள் பற்றியும் நல்ல ஆங்கிலத்தில் சேக்ஸ்பியர், டென்னிசன் போன்ற கவிஞர்களின் கூற்றுகளை மேற்கோள்களாகக் கொண்டு வரையப்பட்டவை.

பொருளடக்கங்களைப் பார்த்த அளவிலேயே அயோத்திதாசரின் வீச்சு மற்ற இருவரின் வீச்சினையும் விட மிக அதிகமானது என்பது தெரிய வரும். சட்ட நுணுக்கங்கள் பற்றி மட்டுமல்லாமல் சமயங்கள் பேசும் தத்துவ நுட்பங்கள் பற்றி மட்டுமல்லாமல் இலக்கியங்கள் பற்றி மட்டுமல்லாமல் முக்கியமான அரசியல் நிகழ்ச்சிகள், பாத்திரங்கள் பற்றி மட்டுமல்லாமல் சமுதாயத்தின் அடித்தளத்திலிருந்து ஒடுக்கப்பட்ட மக்களின் துயரங்களைப் பற்றியும் தாசரால் எழுத முடிந்தது. பாரதி ஏழை வாழ்வு வாழ்ந்தவராயினும் தாழ்த்தப்பட்டவர்களின் நிலையை நன்கு உணர்ந்து தக்க முறையில் எதிர்வினை செய்கிறார் என்று கூறத்தக்க கட்டுரை ஒன்றையும் தந்திருப்பதாகச் சொல்ல முடியாது. இராமசாமி முதலியார் இந்திய நாட்டு மக்களில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களைப் பற்றி அறிந்திருக்க வழியில்லை. பிராமணர்கள் உயர் பதவிகளைப் பிடித்துக் கொள்வதில் கையாளும் தந்திரங்களை அம்பலப்படுத்துவதில் தம்