பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ப. மருதநாயகம் ✤ 185


இக்கட்டுரையை அயோத்திதாசர் எழுதிய ஆண்டு 1907 என்பது நினைவில் கொள்ளத்தக்கது. தமிழகத்தைத் தமிழரசர்கள் ஆண்ட காலத்தில் ஆரியர்கள் அவர்களுக்கு அமைச்சர்களாகி எவ்வாறெல்லாம் எடுத்துக் கெடுத்தார்கள் என்று கூறும் சிறுகதைகளும் நாவல்களும் நாடகங்களும் திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்களால் பின்னால் ஏராளமாக எழுதப்பட்டன. அவைகளுக்கெல்லாம் முன்மாதிரியான இக்கதை மூலம் அயோத்திதாசர் தமிழ் மன்னர்கள் எவ்வாறு அழிந்தார்கள் என்பதைத் தெரிவிப்பதோடு அவர் காலத்திலிருந்த ஆங்கிலப் பேரரசு எவ்வாறு செயல்பட வேண்டுமென்பதையும் யார் யாரை நம்பக் கூடாதென்பதையும் மறைமுகமாகச் சுட்டுகிறார்.

தாம் சொல்லும் கருத்துக்கள் படிப்போரின் உள்ளத்திலும் அறிவிலும் ஆழப் பதிய வேண்டுமென்பதற்காக அயோத்திதாசர் கையாளும் உவமைகள் மிகப்பல; அவை வாழ்க்கையின் புல துறைகளிலிருந்து எடுக்கப்பட்டவை.

நாடு கெட்டதற்குக் காரணம் சாதி சமய வேறுபாடுகளே என்பதை இவ்வாறு விளக்குவார்:

இத்தேசத்துள் கொசுக்கள் அதிகரித்து மக்களை வாதிப்பதற்கு மூலம் யாதெனில் நீரோடைகளிலும் கால்வாய்களிலும் கிணறுகளிலும் நீரோட்டம் இன்றித் தங்கி நாற்றமுறில் அதனின்று சிறிய புழுக்கள் தோன்றி அந்நாற்ற பாசியைப் புசித்து வளர்ந்து இறக்கைகள் உண்டாய, புழுக்கள் என்னும் பெயர் மாறி கொசுக்கள் என்னும் உருக்கொண்டு பரந்து வெளி வந்து சீவர்களை வாதிக்கிறது. இவ்வகை வாதிக்கும் கொசுக்களின் உற்பத்திக்கு மூலம் அங்கங்குக் கட்டுப்பட்ட கெட்ட நீர்களேயாம்.

அது போல் உலகிலுள்ள சகல விவேகிகளும் கொண்டாடும் வித்தை, புத்தி, ஈகை, சன்மார்க்கம் நிறைந்த இந்து தேசமானது நாளுக்கு நாள் வித்தை கெட்டு, புத்தி கெட்டு, ஈகை கெட்டு, சன்மார்க்கங்கள் கெட்டு வருதற்கு மூலம் யாதெனில், தங்களை உயர்த்திக் கொள்ளத் தங்களுக்குத் தாங்களே ஏற்படுத்திக் கொண்ட சாதிகளும் வித்தை புத்திகளால் பிழைக்க விதியற்று சாமி.பயங்காட்டிப் பிழைக்கும் சமயங்களுமாம் (அலாய்சியஸ் I 39).

சாதிகளும் சமயங்களும் நோய் தரும் கொசுக்களை உற்பத்தி செய்யும் சாக்கடைகள் என்பது அவர் கூறும் உவமை.

வேறோரிடத்தில் சாதியால் பிழைப்பாரை,

நமது தேயத்தார் நூதனமாக சாதிகளை ஏற்படுத்திக் கொண்டு உப்பு அதிகரித்தால் நீரும் நீர் அதிகரித்தால் உப்பும் இட்டுக் கொள்ளுவது போல் தங்களுக்கு லாபமும் சுகமும் கிடைக்கக் இடங்களில் சாதியில்லை என்பது