பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

186 ✤ ஒரு பூர்வ பெளத்தனின் சாட்சியம்


போல் நடித்து அன்னியர் தங்களுக்கு லாபமும் சுகமும்கோறும் இடங்களுக்கு சாதி உண்டு என்று நடிப்பது வழக்கம். ஆதலின் சாதி பேதம் இல்லா திராவிடர்கள் யாவரும் அஞ்சவேண்டியவர்களேயாம் (அலாய்சியஸ் 165).

அயோத்திதாசரின் நகையுணர்வு வியப்புக்குரியது. கசப்பான உண்மைகளையும் அவலநிகழ்வுகளையுங்கூட அவரால் நகைச்சுவையோடு சொல்ல முடிகிறது. நம்மவர்களுக்குப் பெருங்கூட்டம் சேர்ப்பதில் உள்ள விருப்பையும் செயல்திறனில் அக்கறையின்மையையும் வெளிப்படுத்த,

நம்முடைய தேசத்தார் மசான வைராக்கியம், பிரசவ வேதாள வைராக்கியங்களைக் போல் கூட்ட வைராக்கியம் கொண்டவர்கள். அதாவது ஒர் கூட்டம் கூட வேண்டும் என்று ஒருவர் அல்லது இருவர் முயன்று ஒவ்வோர் காரியங்களை உத்தேசித்து ஆயிரம் பெயரைக் கூட்டி நடத்தும் முடிவை நாடுகின்றது. அவ்வகை நாட்டமுருங்கால் முயற்சியினின்ற ஒருவரோ இருவரோ அயர்ந்து விடுவார்களாயின் அவர்களுடன் சேர்ந்த ஆயிரம் பெயர்களும் அயர்ந்து விடுவது வழக்கம் (அலாய்சியஸ் 143)

என்றுரைப்பார்.

பெரிய சாதி சின்ன சாதி என்னும் வேடங்களைப் பெருக்கிக் கொண்டே போவார் சாதிப் பெயர்களை எவ்வாறெல்லாம் பயன்படுத்திக் கொள்கிறார் என்பதை எடுத்துக்காட்ட,

மதுரை முதலிய இடங்களிலுள்ள பட்டு நூல் வியாபாரிகளும் கைக்கோளர் என்று அழைக்கும்படியானவருமான ஒர் கூட்டத்தார் முப்பது வருடங்களுக்கு முன்பு குப்புசாமி, பரசுராமன் என்று அழைத்து வந்தார்கள். அவர்களே சில வருடங்களுக்கு முன் நூல் வியாபாரத்தைக் கொண்டு தங்களைக் குப்புசாமி செட்டி, பரசுராம செட்டி என்று வழங்கி வந்து தற்காலம் தங்கள் பெயர்களைக் குப்புசாமி ஐயர், பரசுராம ஐயர் என்று வழங்கி வருகிறார்கள்.

இவ்வோர் அனுபவத்தைக் கொண்டே அரைச் செட்டையை நீக்கிவிட்டு முழுச் செட்டையைப் போர்த்துக் கொள்வதும் முழுச்செட்டையை நீக்கிவிட்டு அரைச் செட்டையைப் போர்த்திக் கொள்வதும் போல் சாதிப் பெயர்கள் யாவும் ஒவ்வோர் கூட்டத்தார் சேர்ந்து சாதி தொடர் மொழிகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டிய காலத்தில் சேர்த்துக் கொள்வதும் அவற்ற்ை நீக்கிவிட வேண்டிய காலங்களில் நீக்கிவிட வேண்டிய பெயர்களாய் இருக்கின்றபடியால் இச்சாதிப் பெயர்களைப் பெரிதென்று எண்ணி தேச சிறப்பையும் ஒற்றுமையையும் கெடுத்துக் கொள்வது வீண் செயலேயாம் (அலாய்சியஸ் 142).

என்று எழுதுவார்.