பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

188 ✤ ஒரு பூர்வ பெளத்தனின் சாட்சியம்


பற்றிய தமது எண்ணங்களை வெளியிடும்போது தாசர் காட்டும் வாதத்திறமை பாராட்டுக்குரியது. சுதேசிகள் என்று தம்மை அழைத்துக் கொள்பவர்களின் இரட்டை வேடத்தைப் புலப்படுத்த ஒரு பத்திரிகையில் வந்த கடிதச் செய்தியைப் பயன்படுத்திக் கொண்டு,

இந்த ஏப்ரல் மாதம் நான்காம் தேதி சனி வாரம் வெளிவந்த மெயில் பத்திரிகையில் (வில்லேஜ் போலீஸ்) அல்லது வில்லேஜ் மாஜிஸ்டிரேட்டென்று குறிப்பிட்டு அவற்றுள் உயர்ந்த சாதியான் தப்பிதம் செய்வானாயின் அவனைச் சத்திரத்திலேனும் சாவடியிலேனும் சில மணிநேரம் இருக்கச் செய்வதும் தாழ்ந்த சாதியான் தப்பிதம் செய்வானாயின் அவனைத் தொழுக்கட்டையில் மாட்டி வைக்க வேண்டுமென்றும் உத்தேசம் கூறியிருக்கிறார்கள். ஆனால் இவர்களும் சுதேசிகளாம்.

நாஷனல் காங்கிரஸ் நாடோடிகளே, சுதேசிய சூரர்களே, சற்று நோக்குங்கள். பெரிய சாதி என்போன் பூசணிக்காய் திருடினால் சிறிய திருட்டு, சின்னசாதி என்போன் பூசணிக்காயைத் திருடுவானாயின் பெரிய திருட்டாமோ. பெரிய சாதி என்போன் நெல்லைத் திருடினால் சொல்லாலடிப்பதும் சின்ன சாதி என்போன் நெல்லைத் திருடினால் கல்லாலடிப்பது போலும். அந்தோ! கறுப்பர்களுக்கு ஒர் சட்டமும் வெள்ளையர்களுக்கு ஒர் சட்டமும் மாறுபட வேண்டுமோவெனக் கண்டு கேட்டவர்கள் உயர்ந்த சாதியானுக்கு ஒர் சட்டமும் தாழ்ந்த சாதியானுக்கு ஒர் சட்டமும் உண்டாவென உத்தேசிக்க இடமில்லாமல் போயது போலும் (அலாய்சியஸ் I 48).

என்று வாதிடுவார்.

ஏழை எளியவர்களுக்கும் அதிகம் கல்வியறிவு இல்லாதவர்களுக்கும் தம் கருத்துகள் தெளிவாகவேண்டும் என்னும் நோக்குடன் எழுதும்தாசர், நாட்டார் கையாளும் பழமொழிகளை முடிந்த இடங்களிலெல்லாம் பொருத்தமாகச் சேர்ப்பார். ஆங்கிலேயர் தம் நலம் கருதியே நாட்டிற்குச் சில நன்மைகளைச் செய்ய முன் வந்துள்ளார்கள் என்பதை மறுத்து எழுதும் தாசர்,

“பிள்ளையார் முதுகைக் கிள்ளிவிட்டு நெய்வேத்தியம் கொடுப்பது போல் ஆங்கிலேயர் ஆயிரம், இரண்டாயிரம் சம்பளம் பெற்றுக் கொண்டு பஞ்சத்திற்குப் பரிந்து பாடுபடுகின்றார்கள் என்றும், இத்தேசத்தில் இரயில் வண்டிகள் ஒடுவது ஆங்கிலேயர்களுக்கே சுகமென்றும் இரண்டு பத்திரிகைகளில் வரைந்துள்ளதைக் கண்டு மிக்க விசனிக்கிறோம். . . “குதிக்க மாட்டாதவன் கூத்தைப் பழித்தான்; பாட மாட்டாதவன் பாட்டைப் பழித்தான்” என்னும் பழமொழிக்கிணங்க சாமிக்கதைச் சொல்லும் போதே சூத்திரன் கேட்கப்படாதென விரட்டும் பாவிகள் சாப்பாடு போடும்போது