பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

192 ✤ ஒரு பூர்வ பெளத்தனின் சாட்சியம்


இது போன்ற விஷயங்கள் யாவற்றின் மீதும் நமது கருணை தங்கிய இராஜாங்கத்தோர் கண்ணோக்கம் வைத்துக் காப்பதே ஏழைக்குடிகளுக்கு ஈடேற்றமாகும் (அலாய்சியஸ் I 106).

என்று வாழைப்பழத்தில் ஊசியேற்றுவது போல் தம் கருத்தைச் சொல்லிவிடுவார்.

பிரிட்டிஷ் பேரரசைப் பாராட்டிவிட்டு இங்குள்ள ஆட்சியாளர்களின் குறைகளை அவர் உணர எடுத்துச் சொல்லும் வழக்கமும் அவர்க்குண்டு.

சிறப்புற்று ஒங்கும் நமது சக்கரவர்த்தியாராவர்கள் அமுத வாக்கும் அதனை முற்றும் தழுவாத மகா கனம் தங்கிய லார்ட் மார்லியவர்களின் போக்கும்

என்று தலைப்பிட்டுக் கொண்டு,

இந்து தேச சக்கிரவர்த்தியாய் நம்மையாண்டு வரும் யூரீமான் ஏழாவது எட்வர்ட் பிரபு அவர்கள் தனது பூரணக் கருணையால் இந்து தேசத்தில் இடியுண்டிருக்கும் ஏழைக்குடிகளை முன்பு சீர்திருத்தி சகல விஷயங்களிலும் சமரச நிலைக்குக் கொண்டு வந்த பின்பு இந்துக்களுக்குச் சிற்சில அதிகார நியமனம் கொடுக்க வேண்டும் என்னும் உத்தேசம் உடையவராய் லார்ட் மார்லியவர்களின் பிரேரேபனைக்கு முன்பே தனது அபிப்பிராயத்தை வெளியிட்டிருக்கிறார்.

சக்கிரவர்த்தியார் கருணை நிறைந்த அமுத வாக்கை லார்ட் மார்லியவர்கள் கவனியாமல் இந்து தேசத்திலிருந்து கமிஷன் விஷயமாகப் பல வகுப்பார் அனுப்பியிருக்கும் விண்ணப்பங்களைக் கருணை கொண்டு ஆலோசியாமலும் தனது விசாரணைக் கெட்டியவரையில் இந்து தேசத்தில் வாசம் செய்பவர்கள் யாவரையும் இந்துக்கள் என்ற எண்ணம் கொண்டு நூதன சட்டங்களை நிரூபிக்க ஆரம்பித்துக் கொண்டார். அத்தகைய எண்ணம் கொண்டவர் இந்து தேசத்தில் வாசம் செய்யும் முகமதியர்களையும் இந்துக்களாகப் பாவிக்காது முகமதியர்கள் வேறு இந்துக்கள்.வேறு என்று பிரிக்க ஆரம்பித்துக் கொண்டார். ஆனால் இந்துக்களுள் இடிபட்டு நசிந்து வரும் முக்கிய வகுப்பாரைக் கவனிப்பாரில்லை (அலாய்சியஸ் 108).

என அவர்கள் செய்த அடிப்படைத் தவற்றைத் தெளிவாக்குவார்.

பெளத்த மார்க்கத்தார்க்கும் பிராமண சமயத்தாருக்கும் உள்ள தீராப் பகை காரணமாக முன்னவர் எவ்வாறெல்லாம் பின்னவரால் இழிவுபடுத்தப்பட்டு வருகின்றனரென்பதற்கு அவ்வப்பொழுது சான்றுகள் தந்து கொண்டேயிருப்பதைத் தம் கடமையாகக் கருதிய தாசர் பிராமண சமயத்தார் தந்திரமாகச் செயல்படும்போதும் கூர்த்த