பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

194 ✤ ஒரு பூர்வ பெளத்தனின் சாட்சியம்


போட்டோகிராப், இந்தியர்கள் லெத்த கிராப், இந்தியர்கள் போனகிராப்பென்னும் தொழில்களை விருத்தி செய்து சகல இந்துக்களையும் சுகமடையச் செய்விப்பார்கள்.

அத்தகைய புத்தியின் விருத்தியின்றிப் பொன்னால் கொட்டை சிறப்புப் பெற்றதா, கொட்டையால் பொன் சிறப்புப் பெற்றதா என்றுணராமல் உருத்திராட்சக் கொட்டை கட்டிக் கொள்ளும் விவேக விருத்தியும் நெற்றியால் நாமம் சிறப்புப் பெற்றதா, நாமத்தால் நெற்றிச் சிறப்புப் பெற்றதா என்றுணராது சிறிய நாமம் போடப்படாது நெற்றி நிறைய பெரிய நாமம் போட வேண்டுமென்னும் விவேக விருத்தியும் நெற்றியால் குழைத்துப் பூச்சும் சாம்பல் சிறப்பு பெற்றதா, குழைத்துப் பூச்சும் சாம்பலால் நெற்றிச் சிறப்புப் பெற்றதா என்றுணராது கோடிட்டுப் பூச வேண்டுமென்னும் விவேக விருத்தி கூறும்படியானவர்களுக்கு என்ன விருத்தி உண்டென்பதைக் கண்டு கொள்ளலாம். (அலாய்சியஸ் 1165).

காங்கிரஸ் தலைவர் சுரேந்திரநாத் பானர்ஜி இங்கிலாந்தில் நிகழ்த்திய சொற்பொழிவொன்றில் இந்தியாவில் வன்முறையில் ஈடுபடும் கொலை பாதகர்கள் இல்லையென்றும் புத்த தன்மத்தைச் சார்ந்தவர்கள் கிறிஸ்து பிறப்பதற்கு 500 ஆண்டுகளுக்கு முன்னமேயே கொடுஞ்செயல்களை நீக்கிச் சீர்திருந்தினவர்களென்றும் சொன்னதை விமர்சிக்கும் தாசர் புத்த தன்மம் பற்றிய பானர்ஜியின் கருத்து சத்தியமாயினும் அவர் இந்தியர்கள் கொலை செய்ய மாட்டார்கள் என்று கூறியதை மறுத்து வாதங்களை அடுக்குவார்.

ஆயினும் சங்கராச்சாரி அவதரித்து புத்த தன்மத்தையே ஒட்டி விட்டாரென்று இந்தியர்கள் கூறி வருவதை நமது பானர்ஜியார் அறியார் போலும்.

ஈதன்றிபாரத யுத்தத்தில் கிருஷ்ணரென்னும் கடவுளே சாரதியாகத் தோன்றி அர்ச்சுனனைக் கொண்டு குருசேத்திர பூமியில் தோன்றியவர்கள் யாவரையும் கொல்லும்படிச் செய்தது போதாமல் அப்பாவங்கள் துலைவ தற்காய அஸ்வமேத யாகம் செய்து மற்றும் சிற்றுார்களில் இருப்பவர்கள் யாவரையும் சுற்றிக் கொல்லும்படிச் செய்த கதையைக் கண்டாரிலை போலும்.

இராமரென்னும் கட்வுள் தோன்றி இலங்கையென்னும் தேசத்திலுள்ள சகலரையும் கொன்றாரென்னும் சங்கதிகளைக் கேட்டாரில்லை போலும். மற்றுமுள்ள தேவர்கள் தோன்றி அவன் தலையை வெட்டிவிட்டார், காலை வெட்டிவிட்டார் என்பது போக எண்ணாயிரம் பெளத்தர்களை, பத்தாயிரம் பெளத்தர்களைக் கழுவிலும் வசியிலும் கற்கானங்களிலும் வதைத்துக் கொன்றார்களென்று கூறும் கழுவேற்றிய படலத்தையும் கண்ணாரக் கண்டாரில்லை போலும்.