பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ப. மருதநாயகம் ✤ 195


இத்தியாதி மக்களைக் கொன்று மாளக் கீர்த்தியைப் பெற்ற படுங்கொலை போதாது பசு மாடுகளையும் ஆடுகளையும் குதிரைகளையும் பதை பதைக்க நெருப்பிலிட்டுக் கொலை செய்து தின்ற கொறுாரக் கதைகளையும் கண்டிலர் போலும் (அலாய்சியஸ் 1166).

பானர்ஜியின் இனத்தவர் தங்களுக்குப் பெருமை சேர்க்கும் உண்மை நிகழ்ச்சிகள் என்று நம்புவனவற்றையே எடுத்துச் சொல்லி தாசர், ஒரு கல்லில் இரு மாங்காய் அடிக்கக் காணலாம்.

நாட்டில் அன்றாடம் ஆங்காங்கே நடக்கும் நிகழ்ச்சிகளைக் காலம், இடம், புள்ளி விவரங்களோடு எடுத்துக்காட்டி அரசிடமும் தனியாரிடமும் பணிவோடும் வினயமாகவும் நீதி கேட்கும் தாசர் மறைமுகமாக அரசாள்வோரின் மனத்தில் தைக்கும்படி எவ்விதமான உண்மை நிகழ்ச்சிகளையோ, கற்பனையானவற்றையோ சுட்டாது பொதுவாக அறவுரை கூறும் கட்டுரைகளையும் அவ்வப்போது எழுதி வந்தார். இவற்றில் அரசனின் கடமைகள் யாவை, அமைச்சரின் செயல்திறன் எவ்வாறிருக்க வேண்டும் என்றெல்லாம் பொதுப்படப் பேசுவார். “அரசியல்” என்னும் தலைப்பிலும் “மந்திரிகள் என்னும் மந்திரவாதிகள்” என்னும் தலைப்பிலும் அவர் எழுதிய தொடர் கட்டுரைகள் இத்தகையவை. இவற்றிற்குத் திருக்குறளையும் ஏனைய நீதி நூல்களையும் பயன்படுத்திக் கொண்டு பிரிட்டிஷ் அரசில் இந்தியா இருந்த நிலையை மனத்திற் கொண்டு ஏற்ற கருத்துக்களைத் தொகுத்துச் சொல்கிறார். இக்கட்டுரைகளில் தனிமனிதர்கள், ஊர்களின் பெயர்கள் இடம்பெறுவதில்லையாயினும் நாட்டு நடப்புகளில் எவற்றை அவர் முன்னிறுத்த விழைகிறார் என்பது தெளிவாகவே தெரியும்.

சாதிப்பாகுபாட்டை வைத்து வயிறு பிழைப்பாரைத் தட்டிக் கேட்காதது அரசின் குற்றம் என்பதைத் தெரிவிக்க ஒரு குடும்பத்தை உருவகமாகத் தருவார்.

ஒர் தகப்பனுக்கு நான்கு பிள்ளைகள் பிறக்குமாயின் அப்பிள்ளைகளை வித்தையிலும் புத்தியிலும் ஈகையிலும் சன்மார்க்கத்திலும் பெருகச் செய்து தந்தை சுகம் அடைவதுடன் அவன் பெயரும் கீர்த்தியும் உலகத்தில் பரவும்.

அங்ஙனம் இராது பிள்ளைகளை சன்மார்க்கத்தில் விடுத்தும் அதனைக் கருதாது துன்மார்க்கத்தைப் பின்பற்றி சகோதர ஒற்றுமையற்றுத் தாங்கள் நிலை குலைவதன்றி அன்னியர்களையும் நிலை குலையச் செய்வார்களாயின் தந்தை மறக் கருணையால் தெண்டித்து, சீர் பெறச் செய்வதும் உண்டு.