பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ப. மருதநாயகம் ✤ 197


தொழுதிருந்து தனக்கான காரியம் நிறைவேறியவுடன் எதிரியின் குடுமியை எட்டிப் பிடித்துக் கெடுத்தல் ஆகிய வன் நெஞ்சத்தை தன் நெஞ்சம் போல் நடித்துக் காட்டுவோர் தீய இனத்தவர்களாகும். நல்லினத்தோர் யாவரென்னில் கல்வி கற்பித்தவர்களைத் தந்தை போல் கருதும் நன்றியறிந்தவர்களும் வித்தை கற்பிப்பவர்களைத் தந்தை போல் கருதும் நன்றியறிந்தவர்களும் உத்தியோகமளித்துக் காப்பவர்களைத் தந்தை போல் கருதும் நன்றியறிந்தவர்களும் தாங்கள் சுகமடைவது போல் சகலரும் சுகமடைய வேண்டுமென்று முயற்சிப்பவர்களும் புல் விற்றேனும் வண்டியிழுத்தேனும் தேகத்தை வருத்திச் சம்பாதிப்பவர்களும் ஆகிய தன் நெஞ்சத்தை உடையவர்களே நல்லினத்தோர்களாகும் (அலாய்சியஸ் 1169).

அரசன் சுதேச மந்திரவாதச் செயல்களையும் புறதேச மந்திரவாதச் செயல்களையும் ஒரே அமைச்சனிடம் ஒப்பிவிடலாகாது என்று கூறும்போதும் யார் யாரைக் குறிப்பிடுகிறார் என்பதை அவரது வாசகர்கள் உணர்ந்திருப்பார்.

வேதங்கள், உபநிடதங்கள், அவை கூறும் அரிய தத்துவங்கள், ஆன்மா, பிரமம் பற்றிய விளக்கங்கள் என்றெல்லாம் ஒரு சாரார் முழக்கமிட்டு வந்ததைக் கண்டித்து “வேஷ வேதாந்திகள் பிறவி” என்னும் கட்டுரையில் அவர்களுக்குத் தக்க பாடம் புகட்டுவார் தாசர்.

தற்காலம் வேதம் இன்னது இனியது என்று அறியாத வேஷவேதாந்திகள் சமட்டியென்றால் வியட்டியென்றும் ஆரோபமென்றும் அபவாதம் என்றும் உள்ள வடமொழிகளைப் புகட்டி ஏனையோரை மருட்டிப் பிரமம் எங்கும் நிறைந்திருக்கிறாரென்று சொல்லுவேன், ஆயினும் பறையனிடமட்டிலும் இல்லையென்பேன்; பிரமம் சருவமயம் என்பேன்; பிராமணன் தனியென்பேன்; பிரமம் எங்கும் நிறைந்திருக்கினும் சூத்திரனுள் பிரமம் வேறு, வைசியனுள் பிரமம் வேறு, கூடித்திரியனுள் பிரமம் வேறு, பிராமணனுள் பிரமம் வேறென்பேன்.

காரணம், சூத்திரனாகப் பிறந்தவன் வைசியனுக்கு ஏவல் செய்து அவனிடம் நற்சாட்சிப் பெறுவானேல், மறுபிறவியில் வைசிகனாகப் பிறப்பான்.

வைசியனாகப் பிறந்தவன் கூடித்திரியனுக்கு ஏவல் செய்து அவனிடம் நற்சாட்சி பெறுவானேல் மறுபிறவியில் கூடித்திரியனாகப் பிறப்பான்.

கூடித்திரியனாகப் பிறந்தவன் பிராமணனுக்கு ஏவல் செய்து அவனிடம் நற்சாட்சிப் பெறுவானேல் மறுபிறவியில் பிராமணனாகப் பிறப்பான்.

என்பேன் எனக் கூறும் வேஷ வேதாந்திகள் விசாரிணையால் அறிந்துள்ள பிரமத்தின் செயலையும் சாதிகளின் பிரிவையும் ஆராயுங்கால் சூத்திர பிரமம் வேறு, கூடித்திரிய பிரமம் வேறு பிராமண பிரமம் வேறாகவுள்ளன போலும்.