பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ப. மருதநாயகம் ✤ 19

புத்தரது மகா வாக்கியங்களே ஆதிவேதம் என்று கூறும் பண்டிதர் பிராமண வேதங்கள் என்று அறியப்பட்டவைகளை ஆழமாகப் பயின்று கட்டுடைப்புக் கலையை மேற்கொள்கிறார். வேதங்களின் தோற்றம் பற்றி அவை கூறும் கருத்துக்களே முரண்படுகின்றன. இருக்கு வேதம் வேதங்களைச் சில ரிஷிகளும் சில அரசர்களும் எழுதியதாகக் குறிப்பிடுகிறது. நான்கு வேதத்தின் பாயிரத்துள் கடவுள் பிரம்மாவுக்குப் போதித்து பிரம்மா முனிவருக்குப் போதித்ததாகக் கூறப்பட்டுள்ளது. மனு நீதி ஓரிடத்தில் பிரம்மா அநாதியான வேதத்தை அக்கினி, வாயு, சூரியன் ஆகிய மூவரிடத்திலிருந்து வெளிப்படுத்தினாரென்றும் மற்றோரிடத்தில் நாய், நரி, கழுதை, பசு, தவளை ஆகியவற்றின் வயிற்றில் பிறந்த மனிதர்கள் வேதங்களை எழுதினார்களென்றும் எடுத்துரைக்கின்றது. இவ்வாறு வேத உற்பத்தி பற்றி நான்கு மூலங்கள் குறிக்கப்பட்டிருக்க அவை கி.பி. ஏழாம் நூற்றாண்டிற்கு முன்னிருந்தன என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் ஏதுமில்லை. நான்கு வேதங்களையும் முழுவதுமாகச் சங்கரரோ, இராமானுஜரோ, மாத்வரோ வைத்திருந்தார்களென்பதற்கும் சரித்திர ஆதாரம் கிடையாது. இவை இன்னின்ன வழிவந்தோரால் இன்னின்ன மடங்களில் வைக்கப்பட்டிருந்தனவென்பதைச் சொல்லும் செப்பேடுகளோ சிலாசாஸனங்களோ யாராலும் சுட்டப்படவில்லை.

வேதங்களை வாசிப்பதால் மனிதர்கள் சீரடைவார்களா, சீர் கெடுவார்களாவெனும் கேள்வியைக் கேட்டுக் கொண்டு பண்டிதர் அவை கொலை, களவு முதலிய பஞ்சமா பாதகங்களை நியாயப்படுத்துவதை எடுத்துக்காட்டுகளுடன் முன் வைப்பார். யஜுர்வேதம் 117 ஆவது வசனமும் அதர்வணவேதம் 160ஆவது வசனமும் வேள்வியாகிய நெருப்பில் சுட்டுத் தின்பதற்கு ஆயிரம் பசுக்களைக் கொல்ல வேண்டுமென்றும் பகைவர் யாவரையும் அழிக்க மந்திரம் உண்டென்றும் சொல்லும். இருக்கு வேதம் 20ஆவது வசனம் வசிட்டர் வருணன் வீட்டில் தானியம் திருட முயன்ற கதையைக் கூறும். இருக்கு வேதத்தின் 24ஆவது வசனம் இயமன் அவனது மகளாகிய யமுனா வென்பாளைக் கற்பழிக்க முயன்ற போது அவள் அவனுக்குக் கூறிய அறிவுரையாகும். யசுர் வேதத்தின் 95ஆவது வசனம் முதல் மனு தன் மகளை மணந்தது பற்றியதாகும். யசுர் வேதத்தின் 72ஆவது வசனம் விரங்கர் என்னும் அரசனுடைய ஐந்து பிள்ளைகளும் இதர மனிதர்களும் வேதத்தின் கிரந்த கர்த்தாக்களென்றும் அதே வேதத்தின் 112 ஆவது வசனம் வேதமெழுதியவர்களில் தரகர்களே இல்லையென்றும் பொய் பேசும். யசுர் வேதம் 111 ஆவது வசனம் சோமபாணம் சுராபானம் எனும்