பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ப. மருதநாயகம் ✤ 211


சாதித் தலைவர்கள் செய்து வரும் படுபாவச் செயல்களுக்குப் பயந்தே பரதேசமாம் நெட்டாலுக்குப் போய் சீவிக்கிறார்கள். அவ்வகை நெட்டாலுக்குச் சென்று இந்தியாவுக்கு வந்துள்ள ஒவ்வோர் ஏழைக்குடிகளும் இரண்டு வீடு மூன்று வீடுகளை வாங்கிக் கொண்டு சுகசீவிகளாக வாழ்வதுடன் நாடுகளிலும் இரண்டு காணி மூன்று காணி பூமிகளை வாங்கிக் கொண்டு சொந்தத்தில் உழுது பயிர் செய்து சுகித்திருக்கிறார்கள் (அலாய்சியஸ் I 237).

இந்திய சாதித் தலைவர்களின் பிரதிநிதியாகவே பேசியுள்ள கோகலே இந்திய ஏழைகளுக்கென்று பாடுபடுவாராயின் பொதுவாய பிரதிநிதியென்று அவரை ஏற்றுக் கொண்டாடலாம் என்றும் பத்து வியாபாரிகளுக்காக முனைந்து கொண்டு தொண்ணுரறு ஏழைக்குடிகளைக் கெடுத்துவிடலாகாதென்றும் தாசர் அறிவுறுத்துகிறார்.

வெளிநாடுகளுக்குச் சென்று இந்தியக் கூலிகள் படும் பாட்டைப் பற்றி இந்தியா பத்திரிகை இதழொன்றில் அப்போது கட்டுரையெழுதிய பாரதியும் சிக்கலின் மூல காரணத்தைப் பற்றிப் பேசாது அக்கூலிகள் எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் பொறுத்துக் கொண்டு தாய்நாட்டிலேயே இருந்துவிட வேண்டும் என்று தான் கூறுவார். ஏழைக் கூலிகள் வெளிநாடு சென்று பிழைக்க இங்குள்ள மேல்சாதிக்காரர்களே காரணமாவார்கள் என்பதையோ சாதி பேதமற்ற ஏழைகளுக்கென்று இராஜாங்க சங்கத்தில் ஒரு பிரதிநிதி இருப்பது நல்லதென்றோ தாசரைப் போல் எடுத்துச் சொல்லும் வழியில் பாரதி சிந்திக்கவேயில்லையென்பது தெளிவாகிறது.

அன்னிய தேசங்களுக்கு இத்தேசத்துக் கூலியாட்களை அனுப்பிவிடுகிறபடியால் இங்கு ஏற்படுத்தப் பெறும் கைத்தொழிற் சாலைகளுக்குக் கூலியாட்கள் கிடைக்காமல் போகிறார்கள் என்று இங்குள்ள பத்திரிகைகள் எழுதிய போதும் தாசர் அடிப்படை உண்மையை அவை மறைத்து வருவதைச் சுட்டிக் காட்டுவார். பச்சையப்பன் கல்லூரியில் கைத்தொழில் கற்பிக்கும் கலாசாலை தொடங்கியபோது கொடுக்கப்பட்ட விளம்பரத்தில் “சாதி பேதம் வைத்துள்ளவர்கள் மட்டிலும் அக்கலாசாலையில் வந்து கற்றுக் கொள்ளலாம். மற்ற சாதி பேதம் அற்றவர்களுக்கு அதில் இடம் கிடையாது என்று பயிரங்கப்படுத்தியிருந்தார்கள். . . . அவர்களை மட்டிலும் ஏன் துரத்தி விடுகிறீர்கள் என்று கேட்டாலே தங்களுக்குச் சாப்பாடு கொண்டு வருவதற்கும் ஜலம் முதலியன மொண்டு கொடுப்பதற்கும் இடைஞ்சலாகிவிடும். ஆதலால் அவர்களைச் சேர்ப்பதில்லையென்று திட்டவட்டமாகக் கூறுகின்றார்கள் (அலாய்சியஸ் I 238).