பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

212 ✤ ஒரு பூர்வ பெளத்தனின் சாட்சியம்


சாதிபேதமற்ற ஏழைகளாகிய பறையர்களுக்கு இங்கு வேலையும் கொடாது கைத்தொழிற்சாலைகளில் இடமும் தராது புறக்கணிப்பார். அவர்கள் வெளிநாடு சென்றாவது பிழைப்பதையும் தடுக்க வேண்டாம் என்று தாசர் கேட்டுக் கொண்டது யார் காதிலும் விழவில்லை.

பிரிட்டிஷ் அரசு சாராயம், வெள்ளி, மண்ணெண்ணெய், புகையிலை ஆகியவற்றின் மேல் இருந்த வரிகளை அதிகப்படுத்தப் போவதாக அறிந்த தாசர் அரசுக்குக் கூறும் அறிவுரை குறிப்பிடத் தக்கது.

அவற்றுள் மனு குலத்தாருக்குச் சீர்கேட்டை உண்டு செய்யும் சாராயம், புகையிலை இவ்விரண்டிற்கும் வரிகளை அதிகப்படுத்துவது சுகமேயாம். மனுக்களுக்கு உபகாரமாக விளங்கும் வெள்ளியின் பேரிலும் மண் தைலத்தின் பேரிலும் வரிகளை அதிகப்படுத்தாமலிருப்பது சுகமாம். எவ்வகையில் எனில் தற்காலம் வெள்ளி சகாயமாய்க் கிடைக்கின்றபடியால் ஒரு ரூபா, அரை ரூபா, கால் ரூபா என்னும் வெள்ளி நாணயங்கள் சேதமில்லாமல் வழங்கி வருகின்றன. . . மண் தைலத்தின் சுகமோ தினேதினே ஓரணா சம்பாதிக்கும் கூலியாளும் ஒரு காசு தைலமேனும் வாங்கிக் குடுக்கையில் வைத்துத் தீபமேற்றி வெளிச்சத்தில் புசித்துச் சுகித்து வருகிறார்கள் . . .

சாராயத்திற்கோ இன்னும் வரியை அதிகம் உயர்த்த வேண்டுகிறோம். ஏனென்பீர்களாயின் மனிதர்களாகப் பிறந்தும் மிருகத்திற்கும் கேடாகச் செய்துவிடுவது சாராயமாகும். . .

புகையிலைக்கும் வரியை இன்னும் அதிகப்படுத்த வேண்டுகிறோம். ஏனென்பீர்களாயின் சிறு வயதிலேயே மக்களின் மார்பு வறண்டு உதிரம் கக்கச் செய்வது புகையிலையேயாம் (அலாய்சியஸ் 1242).

சமுதாயத்தின் அடித்தள மக்களுடைய வாழ்க்கையைப் பற்றி முற்றும் அறிந்த தாசர் அவர்களின் நிலையை மனத்திற் கொண்டு அவர்களுக்கு விளையும் நன்மை தீமைகளைக் கணக்கிலெடுத்துத் தீர ஆய்வு செய்து பிரிட்டிஷ் அரசு, காங்கிரஸ் அரசு, பிராமணர் அல்லாதார் சங்கம், பிராமணர்களின் பத்திரிகைகள் ஆகியவற்றின் முடிவுகளையும் செயற்பாடுகளையும் விமரிசிப்பதை எல்லாக் கட்டுரைகளிலும் காணலாம்.

அயோத்திதாசரின் அரசியல் கட்டுரைகள் அரசியலின் எல்லாக் கூறுகளையும் எட்டியவை. சமயக் கட்டுரைகளையும் இலக்கியத்தையும் போலவே அவரது ஆழ்ந்தகன்ற அறிவைப் புலப்படுத்துபவை. அவரின்