பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ப. மருதநாயகம் ✤ 23

போதித்தவர் புத்தரே. பொதியை விகாரம் நிறுவி அகத்தியரைப் பிரதம குருவாக ஆக்கியவர் அவரே. பொதியை யென்றால் பாலி மொழியில் மலையைத் துளைத்துப் போதிய அறைகள் உண்டாக்கல். சுடலையில் ஆணும் பெண்ணுமாகிய உருத்தோன்ற நடனமாடியவரும் புத்தரே. அவரது தந்தையாராகிய சுத்தோதயச் சக்கிரவர்த்தி இறந்த போது,

குடும்பத்தரசர்கள் யாவரும் வந்து கூச்சலிட்டழுது கண்கலங்கி பிரேதத்தைச் சுடலைக்கெடுத்துச் சென்று தகனத்திற்கு ஆரம்பிக்கும்போது அசோதரையும் இராகுலரும் அம்மடத்தைச் சேர்ந்த சங்கத்தவர்களும் பந்து மித்திரர்களும் சூழ்ந்து நின்றார்கள்.


தகனக் காட்சியைக் கண்டு நின்ற ததாகதர் சுத்தோதய மறுமை பிறப்பறுமோ அறாதோவென்று உள்ளத்துணர்ந்து அறுமென்னும் தோற்ற உணர்ச்சியால் ஆனந்தமுற்று மலைமகள் அசோதரையும் மற்றுமுள்ளோரும் காண, தகன குண்டத்தைச் சுற்றிச் சுற்றித் தனது ஏக சடையுடை துலங்க இவ்வுரு ஆணோ பெண்ணோவென்று கலங்க, சுடலையில் நடனமாடினார் (ஆதிவேதம் 211).

தனது தந்தை உயிருடன் இருந்த காலத்து இறுதி நாட்களில் அவருக்கு ஞானோபதேசம் செய்து தந்தைக்குக் குருவான குமரக் கடவுளும் புத்தரே. “உலகுய்யும் உமது சத்திய தன்மத்தை விளக்கி என்னை ஆட்கொள்ள வேண்டும்” என்று தந்தை மகனை வேண்ட, ததாகதர் அவருக்கு அருள்புரிந்தார்.

புத்தபிரான் தனது தந்தையாகிய சுத்தோதயச் சக்கிரவர்த்திக்குக் குருவாக விளங்கினது கொண்டு “தகப்பன் சுவாமி” என்றும் “பிதாவிதாதா” என்றும் அழைக்கலானார்கள் (ஆதிவேதம் 140).

கங்கையை மக்களுக்கு அளித்தவர் புத்தரே. அவர்கள் தவிப்பையுணர்ந்த அண்ணல் தனது ஏக சடையைக் கரத்திலேந்தி நீட்டியபோது அதனின்று பெருகிய நீர்ப்பிரவாகமாய்ப் பரந்து சகல சீவர்களும் பருகிவிடாய் தீர்ந்ததுகள்.

பாறையெங்கும் கங்கை பிரவாகமுற்றிருப்பதைக் கண்ட கருணாகரன் அங்குள்ள அன்பர்களைக் கொண்டு அவ்விடம் பரவும் அருவி நீரோடையை அடிவாரத்தில் கொணர்ந்து சகல ஜீவர்களுக்கும் உதவும்படி துவாரமிட்டு மலையின் அருவி நீர் பூமியில் வற்றாமல் ஓடி சீவர்களைக் காக்கும்படி செய்துவிட்டார். அம்மலையில் செய்த ஜலதார வழிக்குப் பகவன் பெயரில் ஒன்றாகிய அரித்துவாரம் என்னும் பெயரைக் கொடுத்ததுமன்றி அக்கங்கை நதி பெருகியோடுதற்குக் கங்கை நதியென்றும் புத்தபிரானே அதற்கு