பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ப. மருதநாயகம் ✤ 27


என்றும் வழங்குதல் மரபாயிற்று. சப்த, பரிச, ரூப, ரச, கந்தம் என்னும் ஐந்து இந்திரியங்கள் அடங்கி ஆனந்தம் உதித்துப் பூரணநிலை பெறுவதால் அங்கலிங்க ஐக்கியம் என்ற வழக்கு ஏற்பட்டது. ஆனால் வேஷ பிராமணர்கள் தோன்றிய பிறகு அவர்களைப் பின்பற்றிய கூட்டத்தார் தங்கள் பொய்க் குருக்களிடம் சென்று அங்கலிங்க ஐக்கிய பூசை செய்ய வேண்டும் என்று வேண்டியபோது அதன் உட்பொருள் விளங்காமல் ஆவிடையார் கோவில் என்னும் கட்டிடத்தைக் கட்டி வைத்து அதன் நடுவே பெண்குறி ஆண்குறியை நாட்டி அங்கம் என்றால் தேகம், லிங்கம் என்றால் ஆண்குறி, ஐக்கியம் என்றால் பெண்குறியென்று ஓதி இதுவே உலக சிருட்டி முதலாய் இருக்கின்றபடியால் இதையே நீங்கள் பூசித்து வரவேண்டுமென்று காமிகார்ச்சனை என்னும் லிங்கமதத்தை ஏற்படுத்தினார்கள் (அலாய்சியஸ் II 74-5). லிங்கமதம் பரவுவதைக் கண்ட வைணவர்கள் தாருகாவனத்தில் ரிஷி பத்தினிகளைச் சிவன் கற்பழித்ததால் அவர்கள் சாபமிட அவர் குறி அறுந்து விழுந்ததாகவும் அதனையே சிலர் வழிபடுவதாகவும் கதை எழுதினர்.

‘லிங்கம்’ என்ற சொல் உடலும் மனமும் அயர்ந்த இடம், கருவிகரணங்கள் ஓய்ந்த இடம், ஒரு மருந்துக்கட்டி, செவ்வாய் எனும் கிரகம் எனும் பொருள்கள் கொண்டதேயன்றி ஆண்குறி என்று பொருள்படும் என்று எந்நூலும் கூறவில்லையென்பார் பண்டிதர். அயோத்திதாசர் இந்நாட்டின் தொன்மை பற்றியும் அதன் பொற்காலம், வீழ்ச்சி பற்றியும் ஆரியர்களின் தொன்மத்திற்கு எதிரான ஒரு தொன்மத்தைக் கட்டமைக்கின்றார். ‘இந்திரம்’ என்னும் சொல் ‘ஐந்திரம்’ என்பதின் திரிபாகும். சித்தார்த்தன் கல்லாலடியில் வீற்றிருந்து ஐம்பொறிகளை வென்ற திறத்தால் ஐந்திரர் என்று பெயர் பெற்றார். அது திரிந்து இந்திரர் என வழங்கி அவரது சங்கத்தார் கூடிய இடத்திற்கு இந்திர விகாரமென்றும் அவரை வணங்கிக் கொண்டாடும் விழாவிற்கு இந்திரவிழாவென்றும் அவரை வழிபட்ட கூட்டத்தார்க்கு இந்தியர் என்றும் அவர்கள் வாழும் நாட்டிற்கு இந்தியா என்றும் இந்திரம் என்றும் பெயரிட்டு அழைத்தார்கள். இந்நாட்டிற்குப் பரத கண்டம் என்ற பெயரும் உண்டு. புத்தர் அறவரத்தை ஓதியதால் அவரை வரதர், பரதர் என்றும் கொண்டாடினர். அவர் தந்த ஆதிவேதமாம் முதல் நூல் “வரதன் பயந்த அறநூலென்று” போற்றப்பட்டது. பொய் வேதத்தோரும் பொய் வேதாந்திகளும் பொய்க்குருக்கள்களும் தங்களை இந்துக்கள், இந்து சமயத்தோர் என்று சொல்லிக் கொள்ளத் தொடங்கினார்கள். இந்து மதமென்று ஆரியர்கள் கூறுவது