பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28 ✤ ஒரு பூர்வ பெளத்தனின் சாட்சியம்


கற்பனையானதே; அது ஆகாயக் கோட்டையும் அந்தரப் பூவும் போன்றதே. இந்து மதம் எதுவென்பார்க்கு அவர்கள் சைவமதம் என்றும் வைணவ மதம் என்றும் வேதாந்த மதம் என்றும் விசிட்டாத்துவ மதமென்றும் வேறு வேறு மாறுபட்ட மதங்களைக் கூறி மற்றவரை மயக்குறச் செய்வதுடன் தாங்களும் மயங்குவர் (அலாய்சியஸ் II 380) என்பார் தாசர்.

இந்தியாவின் பொற்காலம் என்பது சத்திய தன்மமாம் புத்த தன்மம் ஓங்கியிருந்த காலமே. கருணையும் அன்பும் நிலைத்திருந்த அக்காலத்தில் மாதம் மும்மாரி பெய்ய, உழுதுண்போர் யாவரும் ஈகையாளராம் வேளாளர் என்று அழைக்கப் பெற்றுத் தன்னலம் பாராது பிறருக்காக உழைத்தார்கள். ஆனால் பெளத்த சமயத்தின் செல்வாக்குக் குறைந்தவுடன் பஞ்ச சீலங்கள் பாழடைந்து பஞ்சமா பாதகங்கள் மிகுந்து கயவர்களும் தன்னலமே குறிக்கோளாகக் கொண்டு, சோம்பித் திரிந்த சமயவாதிகளும் சாமிகளும் அதிகரிக்க அவர்களது வஞ்சகச் செயல்களும் பஞ்சமும் நாட்டைநிலைகுலையச் செய்தன.

கிருத யுகத்தில் பிராமணர்களால் இந்து தருமம் மேனிலையில் இருந்ததென்றும் கலியுகத்தில் சூத்திரர் ஆதிக்கத்தால் அது சீரழிந்ததென்றும் கட்டமைக்கப்பட்ட தொன்மத்திற்கு எதிராகப் பண்டிதர் இதை முன் வைத்தார்.

ஒளவை பற்றி வழங்கி வந்த கதைகளையெல்லாம் கட்டுக்குலைப்புச் செய்வதோடு ஒரு புதிய தொன்மத்தை உருவாக்குகிறார் அயோத்திதாசர். அவரைப் புத்த தர்ம சாட்சியக்காரர்களில் ஒருவரென்றும் அம்பிகை அம்மன் என்றும் உயர்ந்த பீடத்தில் ஏற்றி வைத்து மகிழ்கின்றார். ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு சாக்கைய சுந்திரவாகு என்னும் அரசனுக்கு மகளாகப் பிறந்து மங்கைப் பருவம் எய்தியபோது ஞானசங்கத்தில் சேர விருப்பம் தெரிவிக்க அவளது தாய்மாமன் கந்தருவதத்தனால் பொன்னினால் ஒரு பொட்டு செய்து அதைச் சரட்டில் இணைத்துக் கழுத்தில் கட்டச் செய்து உமள நாட்டு விகாரத்துப் பெண்கள் சங்கத்தில் சேர்ந்து விட்டார்கள் என்பது அவர் தரும் அவ்வை வரலாறாகும். அவளே புத்தரின் திரிபிடக தரும போதங்களை எளிய நடையில் ஆத்திச்சுவடி, குன்றை வேந்தன், வெற்றி ஞானம் எனும் திரிவாசகங்களாக மக்களுக்கு அளித்தவள். பிடகத்தை அறிவித்தவளாதலின் பிடகறி, பிடாரி யெனும் காரணப் பெயர் பெற்ற வேம்படியம்பாள் அவள். வைசூரி, வாந்திபேதி நோய்கள்