பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30 ✤ ஒரு பூர்வ பெளத்தனின் சாட்சியம்


வானவர் முதல்வி, அம்பிகை முதலிய பெயர்களைச் சிவன் மனைவிக்கும், நித்ய செல்வி, வாழ்வலங்காரி, பாக்யவதி, இலக்குமி முதலிய பெயர்களை விஷ்ணு மனைவிக்கும் சரஸ்வதி, கல்விக்கரசி, ஞானத்தாய் முதலிய பெயர்களைப் பிரமன் மனைவிக்கும் சூட்டிக் கொண்டார்கள். சிலர் அம்மனை ஆதியென்ற பறைச்சிக்கும் பகவன் எனும் பார்ப்பானுக்கும் பிறந்தவள்; பறை வள்ளுவனுக்குத் தங்கை என்றும் பரிகசித்துப் புத்தகம் எழுதி வைத்திருக்கிறார்கள் (சிந்தனைகள் II 172).

அயோத்திதாசரின் அவ்வை பற்றிய தொன்ம ஆக்கத்திலும் பெளத்த சமயக் கோட்பாடுகள் மேலோங்கி நிற்பதைக் காணலாம். ஆத்திசூடியை ஆத்திச் சுவடியென்றும் கொன்றைவேந்தனைக் குன்றை வேந்தன் என்றும் வெற்றி வேற்கையை வெற்றி ஞானம் என்றும் அழைக்கும் பண்டிதர் அவற்றின் கடவுள் வாழ்த்துப்பாக்கள் குறிப்பது புத்த தேவனையே என்பதாக விளக்கம் தருவார்.

இஸ்ரேலியர்களைக் காத்த மோசே ஒரு பெளத்த ஞானியேயென்று அயோத்திதாசர் கட்டமைக்கும் தொன்மமும் குறிப்பிடத்தக்கது. புத்த சங்கத்தோர் வகுத்துள்ள விதிகளின்படி மோசே ஓர் உண்மை அந்தணர் என்பது பண்டிதரின் முடிவு. தாயின் வயிற்றில் பிறந்த பிறப்பென்றும் உடலினின்றும் ஒளிமயமாக மாற்றிப் பிறந்த பிறப்பென்றுமாக இரு பிறப்பைக் கொண்டதாலும் எல்லாவுயிர்களையும் தன்னுயிர் போல் காக்கும் இரக்கவுள்ளம் பெற்றிருந்ததாலும் மோசே ஓர் யதார்த்த பிராமணர் ஆவார். அவர் எகிப்தியனாயிருந்த போதிலும் அவர் வாழ்ந்தது சீன பருவதத்திலேயே. ஆதலால் வட நாட்டாரால் சீனர்களென்றும் இசரேலர்கள் என்றும் தென்னாட்டாரால் நாகர்களென்றும் அழைக்கப்பெறும் கூட்டத்தார்க்கும் குருவாக விளங்கினார்; திபேத்தில் வாழும் புத்த குருக்களைப் போல் லாமா வென்று அழைக்கப் பெற்றார். ஏசு இறுதியாகப் பேசிய “ஏலி ஏலி லாமா சபக்தானி” எனும் தொடரில் உள்ள லாமா மோசேயைக் குறிக்கும் அழைப்பாகும். மோசே நித்திய சீவனாக வாழுதற்குத் திரி பீடங்களாகிய பாவம் செய்யாதீர், நன்மையைக் கடைபிடிப்பீர், உள்ளத்தைத் தூய்மையாக்குவீர் எனும் மூன்று கட்டளைகளே வழிகாட்டின. எனவே அவர் மரணத்தை வெல்ல முடிந்தது. பெளத்த அறிஞர்கள் யாவரும் உலகத் தோற்றத்தையும் அதன் முடிவையும் ஆராயாமல் உடலையும் அதன் உற்பவத்தையும் உண்மையையும் ஆராய்வார்களாதலால் மோசே எனும் மகா ஞானியும் கருப்பையின்