பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ப. மருதநாயகம் ✤ 31


வளர்ச்சியையும் முடிவையும் பற்றி விரிவாகப் பேசினார். மோசே களி மண்ணினால் தன்னைப்போல் ஓர் உருவம் செய்து தனது சுவாசத்தை அக்களி மண்ணுருவின் மூக்கில் ஊதி அதனை உயிர்ப்பித்தார் என்பதை உருவகமாக விளங்கிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தேவன் என்னும் புனிதமான பொருளின் சுவாசமென்னும் அறிபொருள் இருக்கிறதென்று அஞ்சிப் பாவத்தின் பீடமாகும் காம, வெகுளி, மயக்கங்களை அகற்றி அறிவு, அன்பு, அமைதி, ஈகை ஆகியவற்றைப் பெருக்கி நன்னெறியில் நிற்க வேண்டுமென்பதே அதன் உட்பொருள். பெளத்த அறிஞர்கள் பெண்ணின் உடலில் மாணிக்கத்திற் கொப்பாகிய நற்பலன் என்னும் மக்கட்பேறும் நஞ்சிற்கொப்பாகிய தீய பலன் என்னும் பிணி, மூப்பு, சாக்காடு ஆகியவை உண்டென்றும் கூறியுள்ளது போல் மோசேயும் பெண்ணை ஒரு நந்தவனமாகவும் பெண்ணின் இடையை நன்மை, தீமை அறியத்தக்க மரமாகவும் இன்பத்தை ஒரு கனியாகவும் உருவகித்து அக்கனியை உண்பதால் மக்கட்பேறும் அக்கனியின்பத்தையே என்றும் கருதுபவன் இறப்பிற்கு ஆளாவான் என்றும் வற்புறுத்துவார்.

மோசே 39 வயது வரை எகிப்திலும், 79 வயது வரை டையர், போன்ஷியா நாடுகளிலும் வாழ்ந்து எண்பது வயதில் இஸ்ரேலியரை எகிப்திலிருந்து விடுதலை செய்து ஜெரிகோ நகரை இஸ்ரேலியர்க்குக் காட்டிவிட்டு ஒரு மலையில் சமாதியாகி விட்டபடியால் இவர் சீனா மலைக்குச் சென்றிருக்க வாய்ப்பில்லை என்று கூறுவார்க்கும் விடையளிப்பார் பண்டிதர். புத்தபிரானின் அறவுரையை விம்பிசாரன் கல்மலையில் அடித்து வைத்திருக்க அக்கற்பலகையை எடுத்துச் சென்றவர் மோசே ஆவார். கிறிஸ்து பிறப்பதற்கு ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே திபேத்தியப் பெளத்த மடங்களில் பயன்பட்ட ஜெபமாலை, பொதுக் கோரிக்கை, வீதிவலம், பரிசுத்த ஜலம், தீபதூபப் பாடல், குருக்கள் உச்சிசவரம் போன்றவை யாவும் புனித அகஸ்தீன் காலத்தில் எகிப்து வழியாகக் கொண்டு போகப்பட்டதாக அமெரிக்க ஆய்வாளர் ஒருவர் ஆய்வுக் கட்டுரை தந்துள்ளார். கிறிஸ்து பிறப்பதற்கு 260 ஆண்டுகளுக்கு முன்பு அசோக மன்னர் பெளத்த ஞானிகளைக் காபூல், ஆப்கனிஸ்தான், சிரியா, மாசிடோனியா, கிரீஸ், எகிப்து ஆகிய இடங்களுக்கு அனுப்பியதாக வரலாறு உண்டு. கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் பெளத்தர்கள் சிரியாவிலும் பாலஸ்தீனத்திலும் அறத்தைப் போதித்து வந்தார் என்பதை அங்குள்ள கல்வெட்டுச் சான்றுகள் நிறுவும். ஆதியில்