பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32 ✤ ஒரு பூர்வ பெளத்தனின் சாட்சியம்


இந்தியாவிலிருந்து பரவிய தத்துவ ஞானத்தை இந்தியர்களிடமிருந்து கிரேக்கரும் கிரேக்கரிடமிருந்து ரோமியரும் ரோமியரிடமிருந்து அவர் ஆட்சிக்குட்பட்ட நாட்டார் அனைவரும் பெற்றாரென்று ஆங்கிலேய அறிஞர் கோல்புரூக் கூறுவதும் கருதத் தக்கதென்று வாதிடுவார் அயோத்திதாசர்.

உலகில் இதுகாறும் தோன்றியுள்ள சீர்திருத்தக்காரர்களுள் உயர் பண்புடையவரென்றும் உலகம் முழுவதும் போற்றப்பட்டவரும் இன்றுள்ள அறிஞர்களால் புகழப்படுபவரும் புத்தபிரானே ஆவார். அவருடைய அறவுரையின் சிறப்புணர்ந்து தன் மதம் புற மதம் என்று சினமுறாமலும் தன்னினம் புறவினம் என்று பேதம் பாராமலும் களங்கமற்ற ஆய்வை மேற்கொண்டு நல்வழியில் நடப்பதே சத்திய தன்மமாகும் எனும் அறிவுரையோடு மோசே பற்றிய தொன்மத்தை அயோத்திதாசர் பரிந்துரைப்பார்.

அரசியல், சமுதாயம், வரலாறு, சமயம், இலக்கியம் ஆகிய ஐந்து பெருந்துறைகளிலும் நடந்திருந்த, நடந்து கொண்டிருந்த, நடக்கப் போகின்ற மோசடிகளையும், இருட்டடிப்புகளையும் இனம் கண்டு யாவர்க்கும் விளங்குமாறு எடுத்துச் சொல்லிய அயோத்திதாசர் தாழ்த்தப்பட்டோர் வாழ்விற்காக இந்த ஐந்து களங்களிலும் போராட வேண்டியதன் இன்றியமையாமையை உணர்ந்தவர். ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாமல் பிணைக்கப்பட்டு தமிழ்ச் சமுதாயத்தின் மேல் தாக்குதல் நடத்தப்பட்டு வருவதைக் கண்டுகொண்ட அவர் தமிழ்க் குடிகள் வெல்ல வேண்டுமானால், ஆட்சி செய்யும் ஆங்கிலேயர்களின் துணை அவர்களுக்குப் பெரிதும் தேவையென்ற முடிவுக்கு வர நேரிட்டது. நாட்டிற்கு விடுதலை அளித்துவிட்டு அவர்கள் வெளியேறிவிட்டால் ஒடுக்கப்பட்டோர் நிலை மேலும் தாழும் என்பதால் சுதேசிகளின் போராட்டத்தை அவர் ஆதரிக்கவில்லை. நாட்டு விடுதலை முற்றுமாகத் தவிர்க்கப்பட வேண்டியது என்று அவர் கருதவில்லை. பூரண சுயராஜ்யம் என்பது அடித்தள மக்களின் நல்வாழ்வை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட வேண்டியது என்பது அவர் முடிவு. வெறும் அரசு மாற்றத்தால் அவர்களுக்கு நன்மை ஏதும் விளையாததோடு பெருந்தீங்கும் விளையும் என்பது அவர் அச்சம். தமிழகத்தில் அவருக்குப் பின் வந்த தமிழ் அறிஞர்களும் சமுதாய இயக்கங்களும் நிறுவனங்களும் அரசியல் கட்சிகளும் அவரைப் போல் சிக்கலின் முழுப்பரிமாணத்தைக் கண்டு கொள்ளவில்லை. எனவே ஐந்து முனைகளில் ஏதேனும் ஒரிரண்டிலேயே போராட முன்வந்தனர்.