பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36 ✤ ஒரு பூர்வ பெளத்தனின் சாட்சியம்


சரித்திரங்களில் சிலதைக் கூட்டியும் குறைத்தும் இருக்கு, யசுர், சாம, அதர்வண, சாகை பாகங்களாம் நான்கு பேத மொழிகளை நான்கு வாக்கியங்களென்று உணராமலும் அந்நான்கு வாக்கியங்கள் விளக்கமின்றி மறைபொருளாய் உள்ளது கண்டு ஒவ்வொரு மொழியின் உட்பொருளைத் தெள்ளற விளக்குமாறு வேத மொழிகளின் உபநிட்சயார்த்த மென்றும் உபநிடதமென வரைந்துள்ள அந்தரார்த்தத்தை அறியாமலும் வேதமென்னும் மொழியைப் பெரிய கட்டுப்புத்தக மென்றெண்ணி . . . பெருங்கட்டுகளாக வரைந்து விட்டார்கள்.


அவ்வேதத்துள் எழுதி வைத்துள்ள சங்கதி யாவும் அக்கினியையே தெய்வமாகத் தொழும் கூட்டத்தோர் சங்கதிகளும் புத்த தன்மத்தைச் சார்ந்த சங்கதிகளுமே மலிவுறக் காணலாமன்றி மற்றவை ஒன்றும் கிடையா. (அலாய்சியஸ் I 668-69)

இருக்கு வேதத்தையும் மனுநீதியையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ள வெண்டி டோனிகர் (Wendy Doniger) எனும் சிகாகோ பல்கலைக்கழகத்துச் சமயத்துறைப் பேராசிரியர் வேதங்கள் பற்றிக் கூறுபவை இங்குக் கருதத்தக்கன. பிராமணர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ளவும் தங்கள் செல்வாக்கை வளர்த்துக் கொள்ளவும் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்ளவும் சமயச் சடங்குகளில் மட்டுமல்லாமல் வாழ்க்கையின் எல்லாக் கூறுகளிலும் தம் பங்கை உறுதிப்படுத்திக் கொள்ளவும் சற்றும் அடக்கவுணர்வோ, கூச்சமோ, தயக்கமோ, மனச்சாட்சியின் உறுத்தலோவில்லாமல் பேசுவதை வேதங்களில் காணலாம் என்பார் (டோனிகர் xxiii). பிறரைத் துன்புறுத்தலும் பிறரைத் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருதலும் அவர்களுடைய நோக்கங்களாகும். எனவே வன்முறையும் அதிகார வெறியும் போற்றப்படுவதல்லாமல் அவையே உலக இயற்கையென்றும் உலக நெறியென்றும் காட்டப் பெறுகின்றன.

சில்வியன் லெவி (Sylvian Levi) என்பார் வேதங்களின் அடிப்படை இலட்சியம் மிருகத்தனமானது (brutal), பொருள்முதல் தன்மையது (‘materialistic’) என்று தமது La Doctrine du Sacrifice Dans Les Brahmanas நூலில் விளக்குவது சரியானதே என்றுரைக்கும் டேர்னிகர் வேதத்தில் தொடக்கத்திலிருந்து இறுதி வரை காணப்படும் ‘உணவு’, ‘உண்போர்’ பற்றிய செய்திகளே லேட்மோடிஃப் (Leitmotif) ஆக இருப்பது லெவி சுட்டும் கருத்திற்கு அரண் செய்யும் என்பார். சதபத பிராமணா (Satapata Brahmana) எனும் நூல் இதனைத் தெளிவாக “உண்பவனும் உணவும்தான் இங்கு உண்மையில் எல்லாம் ஆகும்” என்று வெளிப்படுத்தும்.