பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ப. மருதநாயகம் ✤ 37


உணவுச் சங்கிலியைக் கொண்டே வேதம் கூறும் சமுதாயம் விளக்கப்படுகிறது. வேதவுலகத்தில் தேவர்கள் இவ்வுணவுச் சங்கிலியின் உச்சியில் உள்ளவர்கள். அவர்கள் மனிதர்கள் வேள்விகளில் அளிப்பவற்றை உண்கிறார்கள், மனிதர்கள் வேள்விகளில் பலியிடும் விலங்குகள் மூலமாகத் தங்கள் உடல்களை உணவாக அளிக்கிறார்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே வேள்விகள் நிகழ்த்தப் பட்டன. இச்சங்கிலித் தொடரில் தேவர்களுக்கு அடுத்துள்ள மனிதர்கள் விலங்குகளைப் புசிக்கின்றார்கள். விலங்குகள் தமக்கு அடுத்துள்ள தாவரங்களை உட்கொள்கின்றன. அவை மழை அல்லது நீரை உட்கொள்ளும் நீரிலிருந்தே உணவு உண்டாக்கப் பெறுகிறது. வேதம் காட்டும் சமுதாயம் ஆள்வோர் - ஆளப்படுவோர், உண்போர் - உண்ணப் படுவோர், ஏமாற்றுவோர்-ஏமாற்றப்படுவோர்,வலியர்-எளியர் ஆகிய இரு பிரிவினரைக் கொண்டதாகும். வேதத்தின் கருத்தையே பின்னால் வந்த மனுநீதி “அசையாதவை அசைபவைக்கும், நஞ்சற்றவை நஞ்சுள்ளவைக்கும், கைகளில்லாதவை கைகளுள்ளவைக்கும், கோழைகள் அச்சமற்றவர்களுக்கும் உணவாகின்றனர்” (மனு 5:29) என்று குறிப்பிடுகிறது.

கொல்லுவதும் உண்பதும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாக இங்குக் கருதப்படுகிறது. உண்பதைப் பகைவனை அடக்கித் தோற்கடிக்கும் தொடர் நாடகமாக வேதம் காட்சிப்படுத்துகிறது. ஓர் உயிர் உலகில் வாழ வேண்டி மற்றோர் உயிர் இரங்கத்தக்க நிலையில் தன்னைப் பலி கொடுக்கும் தவிர்க்க முடியாத செயற்பாடாக உண்ணுதல் இங்குப் பார்க்கப்படவில்லை. மாறாக, ஓருயிர் தான் வெறுக்கின்ற, அல்லது தன்னை வெறுக்கின்ற, உயிர்களை வெற்றியோடு அடக்குவதே உண்ணுதலாகப் பார்க்கப்படுகின்றது. சதபத பிராமணா, இதனைத் தேவர்கள் தாங்கள் வெறுப்பவர்களையும் தங்களை வெறுப்பவர்களையும் உணவாக்கி அக்கினியில் போட்டார்கள்; அக்கினியை அவர்கள் அவ்வாறு மகிழ்வித்தார்கள்: அக்கினிக்கு அது உணவானது; தேவர்களின் பாவத்தை எரித்தது. இது போலவே, இப்பொழுது வேள்வி செய்வோன் அவன் விரும்பாதவர்களையும் அவனை விரும்பாதவர்களையும் உணவாக்கி அக்கினிக்கு அளிக்கிறான். அவன் அக்கினியை அவ்வாறு மகிழ்விக்கிறான்; அதனால் அக்கினி வேள்வி செய்வோனின் பாவத்தை எரித்துவிடுகிறான் (சதபத பிராமணா 6.6.311) என்று கூறும்.

சமுதாய வாழ்வு நான்கு வருணங்களாக இவ்வடிப்படையிலேயே பார்க்கப்படுகிறது. பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் ஆகிய