பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38 ✤ ஒரு பூர்வ பெளத்தனின் சாட்சியம்


நான்கு வருணத்தாரும் உண்போராகவும் உணவாகவும் படிநிலை அமைப்புப் பெறுகின்றனர். உயிர்களின் தலைவரான பிரஜாபதி இவ்வுலகின் பல வாய்களைக் கொண்ட ஒரு பேருருவமாகக் காட்டப் பெறுகிறார். “சமய குரு (புரோகிதர்) உன்னுடைய வாய்களில் ஒன்று; அவ்வாயினால் நீ அரசர்களை உண்கிறாய். அந்த வாயால் என்னை ஓர் உணவு உண்போனாக ஆக்கு. அரசன் உன்னுடைய வாய்களில் ஒன்று. அந்த வாயால் நீ வைசியர்களை உண்கிறாய். அவ்வாயால் என்னை ஓர் உணவு உண்போனாக ஆக்கு” (கத உபநிஷதம் 2.9). ‘நீ யாரை உண்கின்றாயோ அவனைவிட நீ பெரியவன், உன்னை யார் உண்கின்றானோ அவனிலும் நீ சிறியவன்’ என்கின்ற நம்பிக்கை இங்கு முன்வைக்கப்படுகிறது. வேதம் காட்டும் வாழ்க்கையில் ஒருவன் இன்னொருவனுடைய அழிவிலேயே செல்வனாகிறான்; இன்னொருவனுடைய இறப்பே அவனுக்கு வாழ்வு தருகிறது. அவன் உண்ண வேண்டுமானால் இன்னொருவன் உணவாக வேண்டும். இந்த அடிப்படையில் நோக்கினால் உடலாற்றல் உடையவனே சமுதாயத்தின் மேல் தட்டில் இருக்க வேண்டும். ஆனால் பிராமணர்களோ தாங்களே மேல் தட்டில் இருப்பவர்களென்றும் தாங்களே யாவரையும் உண்ணும் உரிமை பெற்றவர்களென்றும் தாங்கள் வேள்வி செய்வதால் இந்நிலைக்குத் தகுதி உடையவர்களென்றும் எழுதி வைத்துக் கொண்டார்கள். வேள்வியில் அவர்களுக்கு அளிக்கப் பெறும் பொருள்களுக்கேற்ப மற்றவர்களுக்கு இவ்வுலகில் செல்வமும் விண்ணுலகில் இடமும் கிடைக்குமென்று ஆசை காட்டினார்கள். அரசர்கள் எவ்வளவு உடலாற்றல், படைவலி கொண்டிருந்தாரேனும் அவர்கள் பிராமணர்களைக் கொண்டு நடத்தும் வேள்விகளினாலேயே அவர்களது வெற்றி, தோல்வி நிர்ணயிக்கப்படுமென்றும் மிரட்டினார்கள். ஐதரேய பிராமணத்தில் பிராமணர்கள் யாகம் செய்யும் அரசர்களின் ஆற்றலைக் குறைக்க எப்படி ஏமாற்ற வேண்டும், மந்திரங்களை மாற்றிச் சொல்ல வேண்டும், தேவைப்பட்டபோது பொதுமக்களை எவ்வாறு அவர்களுக்கு எதிராகப் புரட்சி செய்யத் தூண்ட வேண்டுமென்றும் கூறும் பகுதிகளையும் காணலாம்.

வன்முறை, அதிகாரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட சமுதாயம் பற்றி வேதங்கள் பேச இவற்றிற்கு நேர் எதிரான கருத்துக்கள் பின்னால் வலியுறுத்தப்பட்டன. தேவதைகளை மகிழ்விக்க யாகங்கள் செய்ய வேண்டியதில்லையென்றும் யாகங்கள் அவர்களுக்கு உணவாகவேண்டியதில்லையென்றும் பிருகதாரண்யக உபநிடதம் (1410) கூறும். புலால் உணவே தலைசிறந்த உணவு என்று வேதம் கூறியிருக்கப் பின்னால் பிராமணர்கள் புலால் உண்ணாமை