பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ப. மருதநாயகம் ✤ 41


பிறந்தனவென்றும் இருக்கு வேதம் பின்னால் இந்திய மண்ணில் தோற்றம் பெற்றதென்றும் கணபதி வாதிடுவார்.

சாமவேதத்தின் பாடுபொருள் என்னவென்பதிலும் கணபதியின் நம்பிக்கை மற்றவர்களின் எண்ணத்திலிருந்து மாறுபட்டது. இந்த வேதம் முற்றுமாகப் பரிணாம வளர்ச்சி (Evolution) பற்றியே பேசுகின்றது. மூளையும் பொறிகளும் உடலும் எவ்வாறு செயல்படுகின்றனவென்றும் அவற்றைச் செயல்படுத்தும் தேவர்கள் யார் யார் என்பதும் இவ்வேதம் சொல்லும் பாடங்களாகும். இத்தேவரிடம் மனிதன் தன் நல்வாழ்க்கையை வேண்டும் கடவுள் வாழ்த்துகளும் இவ்வேதத்தில் இடம்பெறுகின்றன. சாமவேதமும் யசுர் வேதமும் மண்ணுலகில் நிகழ்ந்த கூர்தலறம் பற்றியே பேசுகின்றன என்ற முடிவை முன்வைக்கும் கணபதி அதற்கேற்றாற்போல் அவ்வேதத்தில் சொல்லப்படும் பாத்திரங்கள், நிகழ்ச்சிகளையெல்லாம் குறியீட்டுப் பொருள்களாகக் கொள்வர்.

தலை: விண்ணுலகம், மலை, பாறை, கூட்டம், கடல்
உடல்: பசு, பிணம், எருமை, உலகம், நிலம், சிறை
மூளை: இதயம், குழம்பு, கஞ்சி, ஆகாயம்
மூளையின் செல்கள்: விண்மீன்கள், விசுதேவர்கள், துளிகள், தானியம்
நரம்புகள்: புல், முடி, நூல், பாம்பு, நாணல், சிலந்திக்கூடு
முதுகுத் தண்டுவடம்: பாம்பு, தூண், உத்தரம், மரம்
மண்டையோடு: பிப்ரு
பிராணா: அசுவம் (குதிரை), செயல்
யக்ஞா, யஜா, சோம யக்ஞா: வாழ்க்கை நடவடிக்கை

சாம வேதத்தை விளக்கியவர்களும் மொழிபெயர்த்தவர்களும் மலை, பசு, புல், பாம்பு, குதிரை போன்றவற்றைக் குறியீடுகளாகக் கொள்ளாததால் அதன் உண்மைப் பொருளறியாது திண்டாடியிருக்கிறார்களென்பது சாயனரின் விளக்கத்தை அடிப்படையாகக் கொண்ட கிரிஃபித்(R.T.H. Griffith)தின் மொழிபெயர்ப்பும், ஆர்ய சமாஜத்தைச் சேர்ந்த தயானந்த சரஸ்வதியின் இந்தி மொழிபெயர்ப்பும், அதனை அடிப்படையாகக் கொண்ட தேவிசந்தின் ஆங்கில மொழிபெயர்ப்பும் சாமவேதத்தின் பொருளைப் பிழைபடவுணர்ந்து பெரும்பாலும் முட்டாள்தனமான விளக்கங்களையே தருகின்றன