பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42 ✤ ஒரு பூர்வ பெளத்தனின் சாட்சியம்


வென்பதும் கணபதியின் கருத்து (கணபதி xiv). நான்கு வேதங்களில் தலைசிறந்ததாகிய சாமவேதத்தை இவர்களிடமிருந்தெல்லாம் காப்பாற்றவே தாம் ஒரு மொழிபெயர்ப்பைத் தருவதாகவும் அவர் அறிவிப்பார்.

மனிதனின் தலைவிதி பற்றிச் சாமவேதம் கூறும் கருத்து உபநிடதங்களும் பின்னால் வந்த சாத்திரங்களும் கூறும் கருத்தினின்றும் முற்றும் மாறுபட்டதென்பது கணபதியின் அறிவிப்பும் அறைகூவலும் ஆகும். மனிதன் பல பிறவிகள், பலவித அனுபவங்களுக்குப் பிறகு ஞானம் பெற்று அவனைப் படைத்தவனோடு இரண்டறக் கலந்து விடுகிறானென்னும் இந்துக்களின் இன்றைய நம்பிக்கையே சாமவேதத்திற்குப் பின்னால் வந்த நூல்கள் கூறுவதாகும். இது தவறானதென்று சுட்டும் கணபதி, இஃதே மனிதனின் தலைவிதியானால் இறைவன் எதற்காக மனிதனை உருவாக்க அரும்பாடுபட்டிருக்க வேண்டும் என்று கேட்பார். இந்து சாஸ்திரங்களெல்லாம் மனிதனுக்கு ஞானம் ஏற்பட்டவுடன் மனிதனின் ஆன்மா இறைவனின் ஆன்மாவோடு என்றென்றும் ஒன்றித்து இருப்பது என்று உணர்கின்றான் என்று கூறும். அப்படியானால் தனி ஆத்மா என்று ஒன்றில்லாதபோது எது பரமாத்மாவோடு ஐக்கியமடைய வேண்டும் என்றும் கணபதிவினவுவார் (கணபதிxvi).

இச்சாஸ்திரங்களினின்றும் பெரிதும் வேறுபட்ட இரண்டு கருத்துக்களைச் சாமவேதம் முன்வைக்கிறது என்பது அவர் தரும் விளக்கம் (1). இன்று வாழ்வதும் இனி வரப்போவதும் ஆகிய யாவும் புருஷனென்றும் சவிதா வென்றும் விஷ்ணு வென்றும் அழைக்கப்படுவதினின்றும் வேறானவை அல்ல. எல்லா நடவடிக்கைகளும் அவனுடையவை; அவனே எல்லா வுயிர்களாகவும் உலகங்களாகவும் தன்னை வெளிப்படுத்துகிறான். அவன் மனிதனைத் தன்னுடைய பிம்பத்தில் படைக்கிறான்; ஆனால் மனிதன் ஒவ்வொரு உணர்வாக ஏழு உணர்வுகளையும் இழந்து அசையாப் பொருள் நிலைக்குத் தன்னைத் தாழ்த்திக் கொள்கிறான். தேவர்கள் அவனை மீண்டும் படிப்படியாக மேலே கொணர்ந்து இறுதியில் மனித நிலைக்கு ஏற்றுகின்றனர். இந்நிலையில் அவன் பல இன்னல்களுக்கு ஆளாகும்போது தன்னுடைய பிறப்பிடமாகிய விண்ணுலகத்தை மீண்டும் அடைய அவாவுகின்றான். இறைவனிடம் இடையறாது வேண்டுதல் மூலம் விண்ணுலகம் சேர்ந்தவுடன் மீண்டும் மண்ணுலகில் பிறக்கும் ஆசையேற்பட்டு மண்ணுலகம் வந்து மண்ணுலக அனுபவங்களைப் பெறுகின்றான். அவன் என்றும் அவனைப் படைத்தவனோடு ஒன்றித்துப் போவதில்லை.