பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46 ✤ ஒரு பூர்வ பெளத்தனின் சாட்சியம்

அனுபவிக்கிறான். இரண்டு எழுத்துக்களைத் தியானிப்பவன் யஜூ(Yajus)க்களால் இடைப்பட்ட உலகத்திற்கு, சோமனின் சந்திர - உலகத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறான். சோமனின் உலகத்தில் ஆன்மாவின் தனிப்பெருஞ் சிறப்பை அனுபவித்துவிட்டுத் திரும்புகிறான். மூன்று எழுத்துகளின் மூலமாக யாவர்க்கும் மேலான புருஷனைத் தியானிப்பவன் ஒளியில், கதிரவனில் முழுமை பெறுகிறான். பாம்பு தன் தோலை நீக்குவது போல், அவன் பாவத்திலிருந்தும் தீமையிலிருந்தும் விடுதலை பெறுகிறான்; சாமன்(Samans)களால் பிரமனுடைய உலகிற்கு அழைத்துச் செல்லப்படுகிறான். வாழும் ஆன்மாக்களுள்ள இவ்விடத்திலிருந்து இந்த மாளிகையிலிருக்கும் யாவர்க்கும் மேலான புருஷனைப் பார்க்கிறான். மூன்று எழுத்துகளும் மரணத்தால் தாக்கப்பட்டுள்ளன. ஆனால் இப்பொழுது அவை பிரிக்கப்படாமல் ஒன்றோடொன்று இணைந்துள்ளன. ஆன்மாவின் உள், வெளி, இடைப்பட்ட செயல்கள் முழுமையாக்கப்படுகின்றன. ஆன்மா அறிகிறது; அது நடுக்கமுறுவதில்லை. இருக்குளால் அந்த உலகமும், யஜுக்களால் இடைப்பட்ட உலகமும், சாமன்களால் பிரமனின் உலகமும் நமக்கு அறிவிக்கப்படுகின்றன. ‘ஓம்’ மூலமாக அறிவுடையவன் அவனையும், அவனுடைய வீட்டையும் அமைதியானதும் வயதற்றதும் அச்சமில்லாததும் அழிவில்லாததுமான உயரிய ஆன்மாவையும்கூட அடைகிறான் (அரவிந்தர் 9).

இப்பகுதியை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொடுக்கும் அரவிந்தர் இதிலுள்ள குறியீடுகள் நமது அறிவிற்குப் புலப்படவில்லையாயினும் அவை ஆன்ம வளர்ச்சியின் வெவ்வேறு படிநிலைகளின் உளவியல் அனுபவத்தை விளக்குகின்றன என்பதில் ஐயமில்லை என்பார். பாமர மக்களின் மூடநம்பிக்கையையெடுத்துச் சொல்லும் இவ்வடமொழி மூலம் பிழைகள் நிறைந்ததாக இருப்பதால் அதன் நேரான பொருள் புரியாமல் போனதே தவிர, பயன்படுத்தப்பட்டவையெல்லாம் நுட்பமான குறியீடுகள் என்பதால் அல்ல என்னும் உண்மையை அரவிந்தர் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார். வாய்மொழியாக வந்த பின்னர் தலைமுறை தலைமுறையாக வெவ்வேறு பிரதிகளாக எழுதப்பட்டமையால் வேதங்களிலும் உபநிடதங்களிலும் பல பிழைகள் மூலத்தை அறிய முடியாத நிலையில் மலிந்து கிடக்கின்றன என்பதை அவற்றைப் படித்துப் பார்ப்பார் அறிய முடியும்.

உபநிடதங்களில் சில வடமொழிச் சொற்கள் எப்பொருளில் பயன்படுத்தப்பெற்றன என்று தெரியாததாலும் அவை பலவாறு பொருள் உரைக்கப் பெறுகின்றன. தத்தம் கருத்துக்களையும் கொள்கைகளையும் ஏற்றிப் பல எளிய பொருளுடைய கூற்றுகளை