பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ப. மருதநாயகம் ✤ 47


தத்துவ நூல்களாகக் காட்ட வேண்டும் என்ற நோக்கில் அவற்றில் சொல்லப்பட்டுள்ள யாவற்றிற்கும் குறியீட்டுப் பொருள் தர முனைவார்க்கு வேதங்களில் மட்டுமல்லாமல் உபநிடதங்களிலும் பல இடர்ப்பாடுகள் விளைவது கண்கூடு. உபநிடதங்களை எட்டா உயரத்திற்கு ஏற்ற முயலும் அரவிந்தர் பெரிய தத்துவ விற்பன்னராயிருந்தும் பல இடங்களில் தடுமாறக் காணலாம். தம்முடைய முன்னுரையில்,

This Vedic and Vedantic imagery is foreign to our present mentality which does not believe in the living truth of the symbol, because the revealing imagination intimidated by the intellect has no longer the courage to accept, identify itself with and boldly embody a psychic and spiritual vision; but it is certainly very far from being a childish or a primitive and barbarous mysticism; this vivid, living, luminously poetic intuitive language is rather the natural expression of a highly evolved spiritual culture (அரவிந்தர், 8).

என்று வேத, உபநிடதங்களுக்குக் குறியீட்டு முறையில் தாம் அளிக்கப் போகும் விளக்கங்களுக்கு அடித்தளம் அமைத்துக் கொள்கிறார். நாகரிக முதிர்ச்சியற்ற ஓரினம் தன்னுடைய இன்பங்களையும் துன்பங்களையும் அச்சங்களையும் நம்பிக்கைகளையும் உள்ளவாறு கூறியிருக்க, அக்கூற்றுகள் அவ்வினத்தின் பண்பாட்டு உயர்வைக் காட்டவில்லையென்பதால் அவற்றிற்குக் குறியீட்டு விளக்கங்கள் கொடுத்து உயர்ந்த தத்துவங்களை அவைகள் சொல்லியிருப்பதாகக் காட்டுவது நேர்மையாகுமா, நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வது ஆகாதா என்ற கேள்விக்கு அரவிந்தர் விடை தரவில்லை; அக்கேள்வியை அவர் எழுப்பவும் இல்லை.

உயர்ந்த குறியீட்டுப் பொருளுக்கு இடந்தராத பகுதிகள் வரும் போதெல்லாம் இப்பொழுது இவற்றின் உட்பொருள் நமக்குப் புரியவில்லை என்று அரவிந்தர் தட்டிக் கழிப்பதையும் காணலாம். பிரஸ்ன உபநிஷதம் ‘ஓம்’ என்ற மந்திரத்தின் ஆற்றலைக் கீழ்க் கண்டவாறு விளக்குகிறது.

சத்யகாமா, “ஓம்” எனும் சொல் மிகச் சிறந்த பிரமன்; அது கீழான பிரமன். எனவே அறிவுடையவன் ஒன்றிற்கோ அல்லது மற்றதற்கோ பிரமனின் இந்த வீட்டு வழியாகத்தான் போக வேண்டும். ஓர் எழுத்தை மட்டும் தியானிப்பவன், அதன் மூலம் அறிவைப் பெறுகிறான்; விரைவில் இவ்வுலகத்தை அடைகிறான். அவனை இருக்குகள் (Riks) மனிதர்களுடைய உலகத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள். அங்கு அவன் தவத்திலும், பிரமச்சரியத்திலும், நம்பிக்கையிலும் முழுமை பெற்று ஆன்மாவின் பெருமையை