பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ப. மருதநாயகம் ✤ 51

முன்னொரு காலத்தே சத்யகாமன், ஜபலாவின் மைந்தன், தன் தாயைக் கூப்பிட்டு, “அம்மா, நான் ஒரு பிரமச்சாரியின் வாழ்க்கையை மேற்கொள்ள விரும்புகிறேன். என்னுடைய கோத்திரம் என்னவென்று சொல்” என்று கேட்டான். அதற்கு அவள் “என்னுடைய குழந்தையே, அது எனக்குத் தெரியாது. நான் இளமையில் வேலைக்காரியாகப் பலவிடங்களுக்குச் சென்றபோது உன்னைப் பெற்றேன். எனவே உன்னுடைய கோத்திரம் என்னவென்று எனக்குத் தெரியாது. என்னுடைய பெயர் ஜபலா உன் பெயர் சத்யகாமா. உன்னை நீ சத்யகாம ஜபலா என்று சொல்லிக் கொள்ளலாம்” என்று விடையிறுத்தாள். அவன் கெளதம ஹாரித்ரு மதரிடம் சென்று. “ஐயா, நான் உம்மிடம் பிரமச்சாரியாக இருந்து கற்க விரும்புகிறேன். ஏற்றுக் கொள்வீரா?” என்று கேட்டான். அதற்கு அவர், “மைந்தனே, உன்னுடைய கோத்திரம் என்ன?” என்று கேட்டார். அவன் “எனக்கு அது தெரியாது; என்னுடைய தாயைக்கேட்டபோது அவள், “நான் இளமையில் வேலைக்காரியாகப் பலவிடங்களுக்குச் சென்றபோது உன்னைப் பெறேன்; உன் கோத்திரம் எனக்குத் தெரியாது. என் பெயர் ஜபலா, உன் பெயர் சத்ய காமா; எனவே நீ உன்னை சத்யகாம ஜபலா என்று சொல்லிக் கொள்ளலாம்” என்றாள். எனவே நான் சத்யகாம ஜபலா ஆவேன்” என்று சொன்னான். அதற்கு அவர்,

“உண்மையான பிராமணனைத் தவிர வேறு யாரும் இவ்வாறு உண்மையைப் பேச மாட்டார்கள். விறகைக் கொண்டு வா; நான் உன்னை ஏற்றுக் கொள்கிறேன். உண்மையிலிருந்து நீ வழுவவில்லை” என்று தெரிவித்தார்.

இக்கதை சாதிப் பாகுபாட்டைக் காட்டவில்லையென்பது முறையாகாது. மாறாக, சாதிப் பாகுபாட்டை வற்புறுத்துகிறது என்றே சொல்ல வேண்டும். பிராமணனுக்கு மட்டுமே கல்வி தர வேண்டுமென்பதால் குரு அவனைக் கோத்திரம் என்னவென்ற கேள்வியை முதலில் கேட்கிறார். அவன் உண்மையைச் சொன்னவுடன் பிராமணனே உண்மையைச் சொல்வான். எனவே அவன் பிராமணனாகத்தான் பிறந்திருக்க வேண்டும் என்று முடிவு செய்து ஏற்றுக் கொள்கிறார். அவன் உண்மை சொன்னதால் பிராமணனாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்று சொல்லியிருந்தாரானால் அவர் பெருமையுடையவராகக் கருதப்படலாம்; சாதியுணர்வு இல்லாதவரென்று போற்றப்படலாம். இக்கதையை வைத்துக் கொண்டு சாதிக் கட்டுப்பாடுகள் அப்பொழுது இல்லையென்று அரவிந்தரோ, பிறரோ வாதிடுவது உண்மைக்குப் புறம்பானதாகும். இக்கதையைச் சொல்லும் சந்தோக்ய உபநிஷதமே இன்னொரு பகுதியில்,