பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56 ✤ ஒரு பூர்வ பெளத்தனின் சாட்சியம்


உயர்வு தாழ்வுகள், சூத்திரர்களின் கடமைகள், பாவங்களும் பிராயச் சித்தங்களும், வினைகளால் விளையும் பயன்கள், ஆன்மாவின் தன்மை, மறுபிறவிகள், வேதம் ஓதுதலின் மதிப்பு, தன்னைப் பற்றிச் சிந்தித்தல் ஆகியவை பற்றியெல்லாம் மனுநீதி விளக்கமாக தொடர்பற்ற முறையில் முரண்பாடுகளுடன் உரைக்கும்.

மனுநீதி என்று மனு என்பவரின் பெயரால் அழைக்கப் பட்டாலும் அது பலரால் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்றும் வருணாசிரம தருமத்தைக் காப்பதே அதன் தலையாய நோக்கென்றும் அதில் மூன்றில் ஒரு பங்கு அல்லது பாதி மகாபாரதத்தில் அப்படியே இருக்கிறதென்றும் அவற்றுள் எது மூலம், எது பின்னால் எழுதப் பெற்றது என்பதைக் கண்டறிய இயலவில்லையென்றும் அது பிராமணரால் எழுதப்பட்டது என்பதோடு பிராமணருக்காக பிராமணரின் நலன் கருதி எழுதப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கதென்றும் அன்னார் தங்களைப் பண்டை இந்தியாவின் மூளைகளாகவும் வாய்களாகவும் கருதி அதனை உறுதி செய்து கொள்ளப் பயன்படுத்திக் கொண்ட நூலென்றும், பல அடிப்படைக் கொள்கைகள் பற்றி அதன் முரண்பட்ட கருத்துகள் சொல்லப்பட்டிருக்கின்றனவென்றும் மனுநீதியின் பகுதிகள் வெவ்வேறு காலங்களில் பல நூற்றாண்டுகளாகச் சேர்க்கப் பட்டதனால் இது நிகழ்ந்ததென்றும் சட்டங்களைப் பற்றிய பகுதிகள் இறுதியாகச் சேர்க்கப்பட்டவையென்றும் அது கூறும் சட்டங்கள் என்றும் நடைமுறைக்கேற்றவையாய் இருந்திருக்க முடியாதென்றும் அந்நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த வெண்டி டோனிகர் (Wendy Doniger) எனும் சிகாகோ பல்கலைக்கழகத்துப் பேராசிரியராகப் பணிபுரிந்த அம்மையார் தமது நீண்ட ஆய்வு முன்னுரையில் எடுத்துரைப்பார்.

மனுநீதி இவ்வுலக வாழ்க்கை பற்றி என்ன நினைக்கிறதென்பதை அது மனிதவுடலைப் பற்றிக் கூறுவதிலிருந்து அறியலாம்.

“ஒரு மனிதன் முடை நாற்றம் வீசும், துன்பத்திற்கு உட்படுத்தப் பெறும், நிரந்தரமற்றதுமான உயிர்களின் குடியிருப்பாகிய உடலை உதறித் தள்ளிவிட வேண்டும். அது சிறுநீர், மலம் ஆகியவற்றால் நிரம்பியது; முதுமையாலும் துயரத்தாலும் பீடிக்கப்படுவது; நோயால் அலைக்கழிக்கப்படுவது; வெறி உணர்வால் மாசுபடுத்தப்படுவது; எலும்புகளே உத்தரங்களாகவும் தசை நாண்களே கட்டுதளைகளாகவும், சதையும் குருதியும் அரை சாந்தாகவும், தோலே கூரையாகவும் கொண்ட வீடே மனிதவுடலாகும்” (6.76-7).