பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ப. மருதநாயகம் ✤ 57


மனு நூல் கூறும் நீதி எக்காலத்துக்கும் எவ்விடத்திற்கும் எம்மனிதர்க்கும் பொருந்துமாவென்பது பற்றி ஏ.கே. ராமானுஜன் கூறும் கருத்து நோக்கற்பாலது.

காண்ட்டில் (Kant) ஒரு சிறு பகுதியைப் படித்துவிட்டு மனுவைப் படித்தோமானால் மனுவிற்கும் உலகளாவிய பரந்த நோக்கிற்கும் உள்ள இடைவெளி எவ்வளவு பெரியது என்ற அதிர்ச்சியால் தாக்கப்படுவோம். நீதிகளை விதிப்பதற்கான மாந்தர் யாவர்க்கும் பொதுவான மனித இயல்பு என்ற ஒன்று உண்டென்று மனு அறிந்திருப்பதாகத் தெரியவில்லை. நீதி என்றாலே யார், யாருக்கு, எப்பொழுது, என்ன செய்தார் என்பதையெல்லாம் பொறுத்தே முடிவு செய்யப்பட வேண்டியது என்பது மனுவின் முடிவு. பெர்னார்டு ஷாவின் “மற்றவர்கள் உனக்கு என்ன செய்ய வேண்டுமென்று விரும்புகின்றாயோ அதை நீ மற்றவர்களுக்குச் செய்யாதே. அவர்களுடைய விருப்பு வெறுப்புகள் வேறாக இருக்கலாம்” எனும் கூற்று மனுவின் எண்ணத்திற்கு நெருக்கமானதாகும். இருவருக்குமுள்ள ஒரு வேறுபாடு ஷா மற்றவரின் விருப்பு வெறுப்புகள் வேறாக இருக்கலாம் என்று எண்ண, மனுவோ மற்றவர்களுடைய இயல்பும் சாதியும் வேறாக இருப்பதால் அவர்களுக்கிழைக்க வேண்டிய நீதி வேறாகும் என்று எண்ணினார் என்பதே (டானிகர் 46).

மனு கூறும் விதிகளும் சட்டங்களும் வருணாசிரம தருமத்தின் அடிப்படையில் சூழலுக்கேற்ப மாறுபடும். யாவர்க்கும் எக்காலத்திற்கும் பொதுவானதென்று இங்கு ஏதுமில்லை.

மக்களுள் ஒரு பாதியான பெண்ணினத்திடம் மனுவிற்கு எள்ளளவும் அன்போ, நம்பிக்கையோ, மரியாதையோ கிடையாதென்பதற்குப் பல சான்றுகளைக் காணலாம். ஆண்களின் அழகிய தோற்றம் பற்றியோ இளமை பற்றியோ பெண்கள் கவலைப்படுவதில்லை. ஓர் ஆண் கிடைத்துவிட்டால் அவன் அழகனாயினும் அருவருப்பான தோற்றத்தானாயினும் பரவாயில்லையென்று அவனோடு உடலுறவு கொண்டு மகிழ்வர். எவ்வளவு கவனமாகக் கண்காணிக்கப்பட்டாலும் பெண்கள் யாவரும் சலன புத்தி கொண்டவர்களாகவும் இயற்கையிலேயே அன்பற்றவர்களாகவும் இருப்பதால் பரத்தையர் போல் ஆண்களைத் துரத்திச் சென்று தங்கள் கணவர்களுக்குத் துரோகம் செய்வர். பெண்களின் இயல்பு அவர்கள் பிரமாவால் படைக்கப்பட்டபொழுதே இவ்வாறு அமைந்ததால் இதை உணர்ந்து ஓர் ஆண் அவர்களைத் தன்னால் முடிந்த அளவு காவலில் வைத்திருக்க வேண்டும். படுக்கை, இருக்கை, அணிகள், காமம், சினம், வஞ்சகம், வன்மம், கெட்ட நடத்தை ஆகியவையே பெண்களுக்கென்று மனு ஒதுக்கியவை (9. 14-17).