பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ப. மருதநாயகம் ✤ 59

தூங்குதல், வேற்றார் இல்லங்களில் தங்குதல் ஆகிய ஆறும் பெண்களைக் கெடுத்துவிடும் . . . வேதப் பாடல்களோடு கூடிய சடங்கு ஏதும் பெண்களுக்குக் கிடையாது. இது உறுதியாக நிலைநாட்டப்பட்ட சட்டமாகும். வலிமையும் வேதப் பாடல்களும் இல்லாததால் பெண்கள் ஏமாற்றுக்காரர்கள். உறுதியாக நிறுவப்பட்ட சட்டம் இதுவாகும் (9. 2-18).

பெண்களைத் திருமணம் செய்து கொடுத்தல் பற்றியும் தத்து எடுத்துக் கொள்ளுதல் பற்றியும் பல்வேறு வகையான குற்றங்கள் புரிந்தவர்களைத் தண்டித்தல் பற்றியும் பேசும் இடங்களிலெல்லாம் பெண் ஆணினும் மிகத் தாழ்ந்தவளாகவும் கீழ் வருணங்களோடு ஒத்த சமுதாய நிலை உடையவளாகவும் எடுத்துக் கொள்ளப்படுகிறாள். ஆண்குழந்தை பெற்றவனுக்கே எல்லாச் சிறப்பும் அளிக்கப்படுகிறது. “ஒரு மனிதன் ஆண்மகன் மூலமாக உலகங்களையெல்லாம் வெற்றி கொள்கிறான்; பேரன் மூலமாக நிலைபேறுடைமையைப் பெறுகிறான்; பேரனுடைய மகன் மூலம் கதிரவனின் உச்சியை அடைகிறான். ஆண் குழந்தையே ஒருவனைப் ‘புத்’ எனும் நரகத்திலிருந்து காப்பதால்தான் இறைவனே ஆண்குழந்தையைப் ‘புத்திரன்’ என்று அழைத்தான் (9.137). ஒருவனின் மனைவி பலவிடங்களில் ஒருவனின் நிலம் என்றே சுட்டப்படுகிறாள். ஒருவனுக்கு ஒரு மனைவி என்னும் நெறி எங்கும் பேசப்படவில்லை. வேள்வி செய்யும் பிராமணன் அவனுடைய வருணத்தைச் சார்ந்த பல பெண்களை மனைவியராகக் கொள்ளலாம்.

எந்தவொரு நீதியானாலும் குற்றத்திற்குத் தண்டனையானாலும் உரிமையானாலும் கடமையானாலும் நன்மை, தீமையானாலும் நான்கு வருணங்களின் அடிப்படையிலேயே வேறுபடுத்திப் பேசும் மனு “பிராமணகுரு பிறப்பாலேயே தேவர்களுக்கும்கூட தேவன், இந்தவுலக மக்களுக்கு ஒரே அதிகாரி. இந்த விதிக்கு வேதமே அடிப்படை ஆதாரம்” (11.85) என்பார். நூலின் தொடக்கத்திலேயே தவத்திலிருக்கும் மனுவை முனிவர்கள் அணுகி “நான்கு வருணங்களின் கடமைகளையும் இரண்டு வருணங்களுக்குப் பிறந்தார்க்குமுள்ள கடமைகளையும் வரிசையாக ஒழுங்குபடுத்திச் சொல்லுங்கள்” (1.2) என்று கேட்கிறார்கள். உலக மக்களின் தோற்றத்தைச் சொல்லும்போது, “யாவரும் பல்கிப் பெருகி நலம் பெறுவதற்காக இறைவன் தன் வாயிலிருந்து பிராமணனையும் கைகளிலிருந்து சத்திரியனையும், தொடைகளிலிருந்து வைசியனையும், கால்களிலிருந்து சூத்திரனையும் படைத்தார்” (1.31) என்றும் அவர்களுக்கான தொழிலைச் சொல்லும்போது “கற்றல், கற்றுத்தரல், தமக்காகவும் பிறருக்காகவும் வேள்வி செய்தல், கொடுத்தல், கொள்ளல் ஆகியவை பிராமணருக்கும் தன்னுடைய குடிகளைக் காத்தல்,