பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ப. மருதநாயகம் ✤ 61


மூன்றாவது மனைவியாக அரச குலத்திலிருந்தோ, வைசிய குலத்திலிருந்தோ பெறலாம். தாழ்ந்த சாதியிலிருந்து மனைவியைக் கொள்ளும் பிராமணன் அவனுடைய குடும்பத்தையும் சந்ததியாரையும் சூத்திரர் நிலைக்குத் தாழ்த்துகிறான். சூத்திரப் பெண்ணின் எச்சிலை உண்டவன், அவளுடைய மூச்சுக் காற்று மேலே பட்டவன், அவளிடம் குழந்தை பெற்றவன் ஆகியோர்க்குக் கழுவாய் இல்லை (3. 12-19).

பலவிதமான பொருளற்ற விதிகளும் மூட நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவைகளும் கீழ்வருணத்தாரை அச்சுறுத்தும் தண்டனைகளும் பல நிகழ்ச்சிகளோடு தொடர்புபடுத்திச் சொல்லப்படுகின்றன.

பிராமண குரு உண்ணும்போது சண்டாளனோ, பன்றியோ, சேவலோ,நாயோ வீட்டு விலக்கான பெண்ணோ, ஆண் தன்மையற்றவனோ பார்க்கக் கூடாது. வேள்விச் சடங்கையோ, விருந்தையோ, தேவதை வழிபாட்டையோ இவர்களில் யார் பார்த்தாலும் அவை கெட்டுவிடும். . . . மூதாதையர்க்குச் செய்யப்படும் சடங்கின்போது தரையில் விழுந்த உணவு போக்கிரித்தனமும் வஞ்சனையுமில்லாத அடிமைக்குரியதாகக் கருதப்படுகிறது (3. 239-46).

பிராமணர்கள் ஊன் உணவு கொள்ளலாமென்று பலவிடங்களிலும் கொள்ளக்கூடாதென்று ஓரிரண்டு இடங்களிலும் சொல்லப்படுவதால் பின்னைய பகுதிகள் பிற்காலத்தில் சேர்க்கப்பட்ட இடைச் செருகல்கள் என்று அறிஞர் கருதுவர்.

எள், அரிசி, வாற்கோதுமை, அவரை, தண்ணீர், கிழங்குகள், பழங்கள் ஆகியவை விதிகளின்படி மூதாதையர்க்கு அளிக்கப்பட்டால் அவை அவர்களுக்கு ஒரு மாதத்திற்குத் திருப்தி அளிக்கும். மீன் கொடுக்கப்பட்டால் இரண்டு மாதங்களுக்குத் திருப்தி அடைவர். மான் கறி மூன்று மாதங்களுக்கும் ஆட்டுக்கறி நான்கு மாதங்களுக்கும் பறவைகளின் கறி ஐந்து மாதங்களும் ஆட்டுக்கறி ஆறு மாதங்களுக்கும் புள்ளிமான் கறி ஏழு மாதங்களுக்கும் கருநிற மறிமான் கறி எட்டு மாதங்களுக்கும் சிறுமான் கறி ஒன்பது மாதங்களுக்கும் ஆண் பன்றி, எருமை ஆகியவற்றின் கறி பத்து மாதங்களுக்கும் அவர்களுக்கு நிறைவளிக்கும் (3. 267-271)

மூன்றாம் அதிகாரத்தில் இவ்வாறு கூறும் மனுநூல் ஐந்தாம் அதிகாரத்தில்,

அனுமதி அளிப்பவன், விலங்கைக் கொல்வோன், கறியை வெட்டுவோன், அதனை வாங்கி விற்போன், அதனைச் சமைப்போன், பரிமாறுபவன், உண்ணுவோன் ஆகிய யாவரும் கொலை செய்தவர்கள் ஆவார்கள்.