பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68 ✤ ஒரு பூர்வ பெளத்தனின் சாட்சியம்


செலுத்தப்படும் பக்தி, தனியிடங்களை நாடுதல், மக்கள் கூட்டத்தில் விருப்பமின்மை, ஆத்ம ஞானத்திலிருந்து பிறழாமை, உண்மை உணர்தல் ஆகியவையே ஞானமெனப்படும் (13, 8-11) என்பன போன்ற கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளன.

ஒட்டு மொத்தமாகப் பார்க்கும்போது உயர்ந்த அறத்தை முருகியல் உணர்வோடு சில இடங்களில் சொல்லும் கீதையில் கூறியது கூறல், முன்னுக்குப் பின் முரண்படக் கூறல், கூறத்தேவையற்றதை மீண்டும் மீண்டும் கூறல், பொருளைத் தெளிவாக்காது சொற்களை அடுக்குதல் போன்ற குறைகளெல்லாம் தவிர்க்கப்படாதது வருந்தற்குரியதாகும். உலக மாந்தரின் உய்வுக்கு எந்நாளும் பொருந்தக்கூடிய வழிகூற வேண்டிய கீதை சில குறிப்பிட்ட பகுதிகளில் குறிப்பிட்ட குழுக்களின் பழக்க வழக்கங்களை ஏற்றிப் பேசுவதும் மக்களுள் வேறுபாடுகளைக் கற்பித்துச் சிலரைப் போற்றுவதும் கீதையை உலகப் பொதுமறையாக ஏற்றுக் கொள்ள முடியாமல் போனதற்குக் காரணங்களாகும். பண்டை இந்தியாவில் தேவதைகளை மகிழ்விக்க ஆரியர்கள் செய்த வேள்விகளை விதந்து கூறும் பகுதிகள் இன்று இந்த நாட்டிலேயே பொருளற்றுப் போய்விட்டன. நால்வருணம் பற்றியும் அவற்றுள் ஏற்றத்தாழ்வு ஏற்படுத்தியும் மக்களுள் ஒரு பகுதியினரைச் சூத்திரர் என்று இழிவுபடுத்தியும் பெண்ணினத்தை முற்றும் குறையுடையதாக மதிப்பிட்டும் பேசும் கவிதைகளெல்லாம் இறைவனின் கூற்றென்று சொல்லப்படும் நூலில் இடம்பெற்றிருக்கக் கூடாது.

பார்த்தன் ஏன் போரிட மாட்டேன் என்று கண்ணனிடம் கூறுவது நோக்கற் பாலது:

ஒரு குலம் அழிவதால் குல தர்மங்களும் சடங்குகளும் அழிகின்றன; குலதர்மம் அழிவதனால் குலம் முழுவதையும் அதர்மம் தாக்குகிறது.

அதர்மம் சூழ்வதால், ஒழுங்கு குலைகிறது; பெண்கள் பாவம் செய்கிறார்கள்; அவர்களின் தூய்மை கெடுகிறது. பெண்கள் கெட்டால், சாதிகளின் ஒழுங்கு கெட்டு, சமுதாயத்தில் குழப்பம் ஏற்படுகிறது.

அக்குழப்பம், அக்குலத்தாரையும், அதனை நாசம் செய்தவரையும் நரகத்திற்குக் கொண்டு செல்கிறது. இறந்தவர்களின் ஆவிகள், சடங்குகளில் அளிக்கப்படும் பிண்டமும் நீரும் கிடைக்காமல் துன்புறுகின்றன.

குலக்கேடர் செய்யும் குற்றங்களால் சாதிக் குழப்பம் ஏற்பட்டு, சாதி தருமங்களும் தொன்று தொட்டு வரும் குலதருமங்களும் கெடுகின்றன.