பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ப. மருதநாயகம் ✤ 71


“பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்; சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்” என்றும் “அந்தணர் என்போர் அறவோர்” என்றும் தெளிவாக்கும் வள்ளுவர் ஆரிய, திராவிட இனங்கள் பற்றியோ, தமிழர், தமிழரல்லாதார் வேறுபாடு பற்றியோ பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் போன்ற பிரிவுகள் பற்றியோ சாதிகள் பற்றியோ குறிப்பிடாதது அவர் அவ்விதப் பாகுபாடுகளையெல்லாம் முற்றும் புறக்கணித்தார் என்பதையும் மனங்கொளல் வேண்டும். வேள்வி செய்வாரை உயர்த்தாது இவ்வுலக வாழ்க்கைக்குத் தேவையான உணவைப் படைக்கும் உழவரை உயர்த்தி “சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம், அதனால் உழந்தும் உழவேதலை” என்று வள்ளுவர் கூறுவது அவர் மறுமையைப் பெரிதுபடுத்தாது. இம்மண்ணில் மாந்தர் நல்ல வண்ணம் வாழ வேண்டியதையே கருத்தில் கொண்டார் என்பதைப் புலப்படுத்தும்.

வேதங்கள், உபநிடதங்கள், மனுநூல், கீதை ஆகியவையெல்லாம் மாந்தருக்குப் பயன்தரும் நூல்களாகாவென்று ஒதுக்கித் தள்ளும் அயோத்திதாசர் ஏன் திருக்குறளை எக்காலும் எல்லாவற்றினும் உயர்த்திப் பேசுகிறார் என்பதைப் புரிந்து கொள்ள அந்நூல்களை மேலெழுந்தவாரியாக ஒருமுறை பார்த்தலே போதுமானது.