பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74 ✤ ஒரு பூர்வ பெளத்தனின் சாட்சியம்


சிந்தாமணி, நாலடி, நான்மணிக்கடிகை போன்ற பிற தமிழ் நூல்களிலிருந்தும் எடுக்கப்பட்டவையே. அவர் உரைநடையில் அக்கவிதைப் பகுதிகள் இரண்டறக் கலந்து விடுகின்றன. காமத்துப்பால் உரையின் முன்னுரையில் ‘'“இன்பங்களிலெல்லாம் மேலானது பெண்ணின்பம் என்பது என் எண்ணம்”'’ என்று போசராசன் கூறியுள்ளார் என்பது போன்ற ஓரிரு இடங்களைத் தவிர வேறெங்கும் வடநூல்களிலிருந்து பரிமேலழகர் மேற்கோள்கள் தரவில்லை.

வடநூல்கள் யாவும் தமிழ் இலக்கியங்களுக்கு முன் தோன்றியவையென்ற எண்ணம் தவறானது என்பது இப்பொழுது பரவலாக உணரப்பட்டு வருகின்றது. வடமொழி மூலங்கள் என்று கருதப்பட்டவை தமிழ் நூல்களின் தழுவல்களாகவும் மொழிபெயர்ப்புகளாகவும் வழிநூல்களாகவும் தோன்றியவை என்பதற்குப் பல சான்றுகள் இப்பொழுது கிடைத்துள்ளன. திருக்குறளில் கெளடலீயம், சுக்கிரநீதி, காமசூத்திரம் ஆகியவற்றின் தாக்கம் பற்றிப் பேசியவர்கள் அந்நூல்களின் காலம், தோற்றம், தன்மை பற்றிய ஆய்வுகள் பெருகிய வழி, தம் கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவை திருக்குறளுக்குப் பின் தோன்றியவை என்பதோடு திருக்குறளுக்குக் கடன்பட்டவையென்பதும் அவற்றையெல்லாம் காய்தல், உவத்தல் இன்றி ஆராய்வார் அறிய முடியும்.

தமிழில் சங்க இலக்கியங்களும் பாலி, பிராகிருதம், சமஸ்கிருத மொழிகளிலிருந்த ஏனைய இலக்கியங்களும் திருக்குறளின் வருகைக்குக் கட்டியம் கூறியிருக்கின்றன. இம்மொழிகளில் எல்லாம் திருக்குறளுக்குப் பின் வந்த அறம், பொருள், காமம் பற்றிய நூல்கள் அதன் தாக்கத்திற்கு உட்பட்டிருக்கின்றன என்பதை இவற்றை இப்பொழுது கிடைத்துள்ள சான்றுகளை வைத்துக் கொண்டு மீள்பார்வை செய்தால் தெளிவாகும்.

வடமொழியில் உள்ள பொருள் பற்றிய நூல்களுள் தலையாயது என்று கருதப் பெறுவது கெளடலீயம் ஆகும். சில குறட் கருத்துக்கள் இதில் இருக்கக் கண்ட அறிஞர் சிலர் வள்ளுவர் இதன் ஆசிரியருக்குக் கடன் பட்டிருக்கின்றார் என்று பேசியும் எழுதியும் வந்தனர். ஆனால் கெளடலீயம் கி.பி. நான்காம் நூற்றாண்டுக்குப் பிறகு எழுதப்பட்டிருக்க வேண்டுமென்று மேலை வல்லுநர்கள் முடிவு செய்வதாலும் வேறு சில சான்றுகளாலும் திருக்குறள் தாக்கத்திற்குக் கெளடலீயம் உட்பட்டிருக்கிறது என்பது தெரிய வருகிறது. அர்த்த சாஸ்திரம் என்று அழைக்கப்பெறும்