பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ப. மருதநாயகம் ✤ 75


கெளடலீயத்தை எழுதியவர் யாரென்று வடமொழியாளர்களால் இன்னும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. பரந்து பட்ட பல பொருள்களைப் பற்றிப் பேசும் அது ஒரு தொகுப்பு நூலென்பதில் ஐயமில்லை.

நிலத்தைக் கொள்ளுதல், அதனைக் காத்தல் என்னுமிவை குறித்து முன்னை ஆசிரியர்களால் எத்துணைப் பொருள் நூல்கள் கூறப்பட்டனவோ அவற்றைப் பெரும்பாலும் திரட்டி இப்பொருள் நூல் ஒன்று செய்யப்படுகின்றது (ப. 1).

என்றே முதல் அத்தியாயம் தொடங்குகிறது. இறுதி அத்தியாயமும் இதனை அப்படியே மீண்டும் சொல்கிறது (ப. 1224).

விண்டர்னிட்சன், ஜாலி, கீத் போன்ற மேலைக் கல்வியாளர்கள் சந்திரகுப்தனது காலத்தில் சாணக்கியர் என்ற பொருள் நூலாசிரியர் ஒருவரும் இருந்ததில்லையென்பதற்குப் பல சான்றுகள் தருவர். கெளடலீயம் எனும் பொருள் நூல் கி.பி. மூன்றாம் நூற்றாண்டில்தான் யாக்ஞ்ய வல்கிய ஸ்மிருதியைப் பெரிதும் தழுவியிருத்தலின் அதற்குப் பின் தோன்றியதே என்பார் ஜாலி. கையாளும் நடையிலும் வாக்கிய அமைப்பிலும் இது பழமையான வடமொழி நூல் அன்று என்பது கீத்தின் கருத்து. எனவே அர்த்தசாஸ்திரம் திருக்குறளுக்கு இரண்டு மூன்று நூற்றாண்டுகளேனும் பிற்பட்டதென்றறியலாம்.

மனு முதலான வடநூலார் பலர் உழவுத் தொழிலை இழிதொழில் என்றும் பிராமணரால் செய்யத்தக்கதென்றென்றும் கூறியிருக்கக் கெளடலீயம் உழவுக்குச் சிறப்பிடம் அளிக்கும். இது குறளின் தாக்கத்தால் விளைந்ததாகும். பண்டிதமணி,

தமிழ் நூலார் எல்லாத் தொழில்களினும் தலையாயது உழவு என்று கூறுப; இதனை,

“சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்

உழந்தும் உழவே தலை”

“உழுவோர் உலகத்தார்க்கு ஆணி”

என்னும் திருக்குறள்களானும் “வருத்தமிலவேனும் பிற தொழில்கள் கடை என்பது போதற ‘உழந்தும் உழவே தலை’ என்றும் கூறினார் என்பது முதலிய பரிமேலழகர் உரைக்குறிப்புகளானும், ‘இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும் உழவிடை விளைப்போர்’ என்னும் சிலப்பதிகாரத்தானும் தெளிய உணரலாம். இந்நூலில் கூறிய முறை வைப்புத் தமிழ் நூலார் கொள்கையைத் தழுவியிருத்தலான் கெளடலீயர் தமிழர் வழக்கவொழுக்கங்களுள்