பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
1


தொன்மப் படைப்பு, குலைப்பு, மீட்டுருவாக்கம்


அண்ணல் அயோத்திதாசர் பல துறைகளில் தமிழ் அறிஞர்களுக்கு முன்னோடியாகவும் தமிழ்ச் சமுதாயத்திற்கு வழிகாட்டியாகவும் அடையாளம் காணப்பெற வேண்டியவர். தொட்ட துறையிலெல்லாம் தம் முத்திரையை ஆழமாகப் பதித்தாரென்றும் அவர் தொடாத பெரிய துறை ஏதுமில்லை என்றும் கூறலாம். அரசியல், சமுதாயம், சமயம், கல்வி, மருத்துவம், படைப்பிலக்கியம், பத்திரிகை போன்றவற்றிலெல்லாம் அவருடைய அறிவுப் பங்களிப்பு குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தியது. இந்நாட்டில் சமயத்தின் பேரால், சாதி அடிப்படையில் ஒடுக்கப்பட்டவர்களுக்குப் பெளத்தமே தக்க அடைக்கலம் என்பதை அம்பேத்கருக்கு உணர்த்தியதும், பகுத்தறிவு, தன்மானம், நவீனத்துவம் ஆகிய கொள்கைப் போக்குகளின் இன்றியமையாமையைப் பெரியார் ஈ.வெ.ரா. அறிந்து கொள்ளத் துணை செய்ததும், பூர்வ குடிகளின் நலன் எங்கெங்குக் கெடினும் அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்ய வேண்டும் எனும் எண்ணத்தையும் உறுதியையும் தமக்குப் பின் வந்த தனிமனிதர்களுக்கும், இயக்கங்களுக்கும், கட்சிகளுக்கும் அளித்ததும், உரிமை இழந்தவரும் மறுக்கப்பட்டவரும் கல்வி பெறுவதன் மூலமே தம்மை உயர்த்திக் கொள்ள முடியும் என்பதால் எளியவர்க்குப் பள்ளிகளைத் திறந்து விடல், பகலுணவு அளித்தல், கட்டணமின்றிக் கல்வி தரல் ஆகியவை உடனடியாகச் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் என்பதைப் பின்னால் தமிழகத்தில் ஆட்சிப்