பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ப. மருதநாயகம் ✤ 81

பகவானாகிய பிரமதேவர் நூறு இலக்கம் சுலோக அளவுள்ள நீதி நூலை உலகம் நலமடைதற் பொருட்டுக் கூறினார். பின்னர், வசிட்டர் முதலிய எம்மனோரால் சில்வாழ் நாளையுடைய அரசர் முதலியோர் பொருட்டு நலம் பெருக, அந்நீதி நூலின் சாரம் சுருக்கிப் பொருந்து மாற்றான் அமைத்துத் தொகுக்கப்பட்டது (ப.1).

எனும் கூற்று மட்டுமல்லாமல் நூலின் அமைப்பும் தன்மையும் அது பலரால் பல காலங்களில் பல பொருள்கள் பற்றி எழுதிச் சேர்க்கப்பட்டதென்பதை வெளிப்படுத்தும்.

இது கருதியே ந.மு. வேங்கிடசாமி நாட்டார் அவர்களும் இதில் கூறப்பட்டுள்ள பொருட்பகுதி யனைத்தும் உயரிய நாகரிகத்தின் அறிகுறிகளே; எனினும் கூறவேண்டுவன அனைத்தும் நிரல்பட முறையானே இதில் கூறப்பட்டுள்ளவெனல் சாலாது. நகரமைக்குமாறு, அரண் முதலியன அமைக்குமாறு, நவமணிகளின் இலக்கணம், யானை குதிரை முதலியவற்றின் இலக்கணம், பல்வகை அளவைகள், பத்திர வகைகள், அமைச்சராதியோர் இலக்கணம், அவர் பெறும் சம்பளம், வழக்காராய்ச்சி முறை என்று இன்னோரன்ன பல செய்திகள் ஓர் தொகை நூலில் போல் இதில் காணப்படுகின்றன (ப. 44).

என்று கூறுவார்.

பல பொருள்கள் மீண்டும் மீண்டும் பேசப் பெறுதலும் முரண்பட்ட கருத்துகள் வெவ்வேறு அத்தியாயங்களில் இடம் பெறுதலும் பாடுபொருள்கள் ஒழுங்குற அமையாமையும் சுக்கிரநீதி இடைச் செருகல்கள் மிகக் கொண்ட தொகை நூல் என்பதை நிலை நாட்டும். மூன்றாம் அத்தியாயத்தை மட்டும் எடுத்துக் கொண்டோமானால் அதில் “எல்லோர்க்கும் உரிய நல்லொழுக்கங்கள், பிறநாட்டுச் செலவு, அரசவை புகுதல், நூலாராய்ச்சி முதலியன, உலகத்தைத் தன்வயப்படுத்தும் வழி, மகளிர் பால் இயற்கையாக நிகழும் பிழைகள், மகட்கொடை முறை, கல்விச் செல்வங்களை அடையும் வழி, தந்தை வழிப் பொருளைக் கூறு செய்யுமுறை, கொடை மாட்சி, குணஞ்செயல்களின் நன்மை தீமைகள், நல்லொழுக்கமிக்க அந்தணர் பெருமை, தொழில்களின் தலைமை முதலியவைகள், அறிவின் மாட்சி” ஆகிய பல்வேறுபட்ட உட்தலைப்புகளைக் காணலாம். ஒன்றுக்கொன்று தொடர்புடைய பொருள்கள் முறையாகப் பேசப் பெறவில்லை. நான்காம் அத்தியாயத்தில் மூன்றாம் பிரகரணம் “வித்தியா கலா நிரூபணம்” என்று அழைக்கப் பெற்றுச் சாதி ஆராய்ச்சி, அந்தணர் முதலியோரின் தொழில்கள், வேத முதலியவற்றின் வகைகள், முப்பத்திரண்டு வித்தைகளின்