பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ப. மருதநாயகம் ✤ 83

என்றும் இன்பமுடையனாய் மகிழ்ச்சியடைவான். அங்ஙனம் உண்ணப்படாத அப்பொருள் உடையான் என்றும் துன்பம் எய்துவான் (ப. 367).

என்றும், நான்காம் அத்தியாயம் ஏழாம் பிரகரணம்,

பெண்களுக்கும் அந்தணர்க்கும் இடையூறொழித்து அருள் செய்யுங்காலும் அந்தணர்க்கும் பசுக்களுக்கும் அழிவு நேருங்காலும் உண்டாம் போரில் அரசன் ஒரு பொழுதும் புறக்கணிப்பாளனாக இருத்தலாகாது (ப. 342).

என்றும், நான்காம் அத்தியாயம் மூன்றாம் பிரகரணம்,

அந்தணர்க்குப் பதினாறு எருதுகளுடைய ஏரும்,

அரசர்களுக்குப் பன்னிரண்டு எருதுகளுடைய ஏரும்,

வணிகர்க்கு எட்டு எருதுகளுடைய ஏரும்,

சூத்திரர்க்கு நான்கு எருதுகளுடைய ஏரும்,

அவற்றில் தாழ்ந்த பிறர்க்கு இரண்டு எருதுகளுடைய

ஏரும் உரியனவாம். அவை நிலங்களின் மென்மை நோக்கிக் கொள்ளப்படுவனவாம் (ப. 205).

என்றும் அந்தணர்க்கு எதிலும் முன்னுரிமை தரும்.

அரசர் அறவழி ஒழுக வேண்டும் என்னும் திருக்குறள் கருத்தைச் சிலவிடங்களில் எடுத்துச் சொல்லும் சுக்கிரநீதி அதற்கு முரண்பாடாக,

ஆற்றல் மிக்க பகைவனை அழித்தற்கு வஞ்சகமாகச் செய்யப்படும் போர்ச் செயலை யன்றிப் பிறிதோருபாயம் இன்று. முற்காலத்தில் இராமனாலும் கிருட்டிணனாலும் இந்திரன் முதலிய தேவராலும் இவ்வஞ்சகப் போரே மேற்கொள்ளப்பட்டது. இராமனால் வாலியும், கிருட்டிணனால் யவனனும் இந்திரனால் நமுசியும் வஞ்சித்துக் கொல்லப்பட்டனர் (ப. 350).

வஞ்சகமாகச் செய்யப்பட்ட பொன்களை மிகுதியாகக் கொடுத்தலால் பகைப் படையை வஞ்சித்து வேறுபடுத்து, பகையச்சம் காரணமாக முன் விழித்திருந்தமையால் உண்டாகிய களைப்பினை உடையதும் இனி உறுதியாகத் தனக்கு அழிவு வாராதென்னும் நம்பிக்கையால் நன்கு துயில்கின்றதும் ஆகிய அப்பகைப்படையைத் தான் சோர்விலனாய் நின்று அழித்தல் வேண்டும் (ப. 351).

என்று பகைவர்களைப் பல வழிகளில் வஞ்சித்தும் தூங்கும் போதும்கூடக் கொல்லலாம் என்று அறிவுரை கூறும்.