பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86 ✤ ஒரு பூர்வ பெளத்தனின் சாட்சியம்


சிறப்புடையதாய் அமைந்துள்ளது என்பது ஒருதலை. சுக்கிரநீதி எழுதப் பெற்ற காலம் திருக்குறள் காலத்தினும் பல நூற்றாண்டுகள் பின்னது என்பதைக் கா. சுப்பிரமணியபிள்ளை தமது “ஆராய்ச்சி மதிப்புரையில்” சான்றுகள் தந்து நிறுவுகிறார்.

இந்நூல் எழுதிய காலம் வங்காளத்தில் பாலர் என்னும் அரசரும் தென்னாட்டில் இராஜராஜன் முதலிய சோழரும் அரசாண்ட காலம் என்பது பல குறிப்புகளால் அறியக் கிடக்கின்றது. அக்காலம் பத்தாவது அல்லது பதினோராவது நூற்றாண்டு ஆகும். கி.பி. எண்ணூறு முதல் ஆயிரத்திரு நூறு வரை உள்ள காலப்பகுதியே வங்காளத்தில் தந்திர நூற்காலம் எனப்படும். இத்தந்திர நூற்காலத்திலேதான் அகத்திய மதம் என்னும் நூலுள் நவக்கிரகம் அல்லது ஒன்பது கோள்களைத் திருப்தி செய்தற் பொருட்டு நவமணிகளைப் பயன்படுத்த வேண்டுமென்ற குறிப்பும் காணப்படுகிறது. பத்தாவது நூற்றாண்டில் எழுந்த விஷ்ணு தருமோத்ர புராணம் என்பதனுள் நவமணிகளே மகாரத்தினங்கள் என்று கூறப்பட்டிருக்கின்றன. . . தந்திர நூல் காலத்தில் தான் ஒன்பது மணிகள் ஒன்பது கோள்கட்குச் சிறந்தன என்ற கருத்து நிலை பெற்றது. அங்ஙனம் நிலை பெற்ற கருத்தே சுக்கிர நீதியுள் காணப்படுதலின் அஃது அக்காலத்ததென்பது ஊகிக்கப்படும். இன்னும் அக்காலத்தில் தான் திருமால், சிவபிரான், கணபதி, சூரியன், அம்பிகை என்னும் ஐந்து தெய்வங்களையும் ஒருங்கு வழிபடும் தந்திர வழக்கம் வடநாட்டில் ஏற்பட்டதென்று தந்திர தத்துவம் என்னும் நூலின் முகவுரையில் கூறிய காரணங்களால் தெரியக் கிடக்கின்றது . . . அவ்வழிபாட்டு முறையே சுக்கிர நீதி நாலாவது பிரகணத்துள் 63-ஆவது சுலோகத்தில் கூறப்பட்டது காண்க . . .

சுக்கிர நீதியையும் திருக்குறளையும் ஒப்பிட்டுப் பார்ப்போர் திருக்குறள் கி.பி. இரண்டாவது நூற்றாண்டுக்கு முந்திய நூலென்றும் சுக்கிர நீதி கி.பி. பத்தாவது நூற்றாண்டில் எழுந்த நூலென்றும் அறிந்து கொள்ளற்பாலர். (பக்.19-20)

இதனால் வள்ளுவர் வடநூலார்க்குக் கடன்பட்டிருக்கிறார் என்ற எண்ணம் தவறானதென்பதும் குறட் கருத்துகளே அங்குச் சென்றிருக்கின்றன என்பதும் புலப்படும்.

திருக்குறளின் உயரிய அறவுரைகள் ஆங்காங்கே பொதிந்து கிடப்பினும் சுக்கிரநீதி வருண வேறுபாட்டை வலியுறுத்தும்போதும் பெண்ணிழிவு பேசும் போதும் வேறுபல பாடுபொருள்களிலும் தமிழ் மறையினின்றும் மாறுபடக் காணலாம்.

அறத்தை அறத்திற்காகவே மேற்கொள்ள வேண்டுமென்பதும் அன்புடைமை உயிர்களின் இயல்பென்பதும் ஈதலும் அதனால் இசைபட