பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8 ✤ ஒரு பூர்வ பெளத்தனின் சாட்சியம்

பொறுப்பேற்றவர்களுக்கும் தன் செயல்கள் மூலம் வழிகாட்டியதும், பழந்தமிழ் இலக்கியங்களில் இடைச் செருகல்கள் மூலமாகவும் உரைகள் மூலமாகவும் செய்யப்பட்டிருந்த மோசடிகளைப் பின் வந்த தமிழறிஞர்கள் கண்டு கொள்ளக் காட்டியதும், அரசியல், பொருளாதார, சமயச் சிக்கல்கள் பற்றிய கட்டுரைகள் எத்தகைய தமிழ் நடையில் அமைய வேண்டும் என்பதற்கும், அரசியல் சதுரங்கத்தில் நகர்த்தப்படும் காய்கள் பிற்படுத்தப்பட்டோருக்கு விளைவிக்கப் போகும் இடையூறுகளை முன்னறிந்து எவ்வாறு அவற்றைத் தோலுரித்துக் காட்ட வேண்டும் என்பதற்கும் ஆங்கில, தமிழ்க் கட்டுரைகள் எழுதி நீதிக் கட்சியினருக்கு முன் மாதிரியாக இருந்தவரும் அவரே. பின்னை நவீனத்துவத்தார் “Truth is not absolute but relative” (உண்மை முழுமையானதன்று, ஒரு சார்புடையது) என்பதால் வரலாறு மீண்டும் மீண்டும் மாற்றியெழுதப்படலாம் என்பர்.

திரு.வி.க., அயோத்திதாசரை “நூல் பல கற்ற சால்பினன்” என்றும், “வல்லவர் போற்றும் கல்விமான்” என்றும், “இல்லறம் என்னும் நல்லறம் ஏற்று விருந்தினை ஓம்பி இருந்தவன்” என்றும், “செந்தமிழ் பூண்ட அந்தணன்” என்றும், “பொறுமைக்கொரு உறைவிடம்” என்றும் போற்றும் உரைகள் பொருள் பொதிந்தவை. தம் காலத்து மேட்டுக்குடி அறிஞர்களுக்கு இணையான கல்வியறிவைப் பெறுவதற்கு அவர் அரும்பாடுபட்டிருக்க வேண்டும். தமிழ், ஆங்கிலம், பாலி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளை அவர் அறியாதிருந்தால் அவர்களால் எள்ளி நகையாடப்பட்டு எளிதில் புறக்கணிக்கப்பட்டிருப்பார். அவர் காலத்து அறிஞர் ஒருவர் காட்டியிருப்பது போல், அயோத்திதாசர்,

ஆகமம் புராணம் இதிகாசம் மறை கோசங்கள்
அத்வைதம் வசிட்டத்வைதம்
சமண முனிவர்கள் பஞ்ச காவியம் கலை ஞானம்
ஆயுர்வேதம் தத்துவம்
யோகநிலை சாத்திரம் சித்தர் நூல் பக்தி நெறி
யுகமொடு பலது மாய்ந்து (அலாய்சியஸ் | xxviii)

தம்மைப் பண்டிதர் என்னும் பெயருக்குத் தகுதிப்படுத்திக் கொண்டது அவர் செய்த முதல் வேலை. பாலியிலுள்ள திரிபிடகம் முதலானவற்றையும் வடமொழியில் உள்ள வேத உபநிதடங்களையும் தமிழில் அவர் காலத்து ஒலைச் சுவடிகளில் கிடைத்த தொல்காப்பியம், புறநானூறு, திருமந்திரம், சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி,