பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90 ✤ ஒரு பூர்வ பெளத்தனின் சாட்சியம்


பரிமேலழகர் குறிப்பிடாதது காண்க. தும்மல் பற்றிய இப்பாடல்களுக்கும் காமசூத்திரத்துத் தும்மலுக்கும் உள்ள வேறுபாடுகளை விளக்கத் தேவையில்லை.

வள்ளுவர் அறம், பொருள், இன்பம் பற்றிப் பேசுகையில் வடநூல்களுக்குக் கடன்பட்டிருக்கிறார் என்று கூறிய வையாபுரிப்பிள்ளை போன்றவர்கள் அர்த்தசாஸ்திரம், சுக்கிர நீதி, காமசூத்திரம் போன்றவற்றின் காலம் சற்றும் அறியப்படாத போது அவையெல்லாம் திருக்குறளுக்கு முந்தியவையாகத்தான் இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டு ஆங்காங்கே கண்ட சில பொதுவான தொடர்கள், கருத்துகள், உவமைகளைக் கொண்டு தமது முடிவை முடிந்த முடிவாக அறிவித்துச் சென்றனர். வடமொழி இலக்கியங்கள் அவர்கள் கற்பனை செய்து கொண்டது போல் அவ்வளவு பழமையானவை அல்ல என்பது இப்பொழுது தெளிவாகியுள்ளது. எனவே அவர்கள் கண்ட ஒற்றுமைப் பகுதிகளுக்கெல்லாம் மூலம் குறள் என்று இப்பொழுது அறிய முடிகிறது. திருக்குறளையும் நாலடியாரையும் மொழிபெயர்த்த மேலை அறிஞர் போப் அடிகளார் தமிழ், வடமொழி நீதி இலக்கியங்கள் பற்றிய காலத் தெளிவு இல்லாதபோது அறிவித்த முடிவும் கருதத்தக்கது.

It would be possible, indeed, to find a close Sanskrit parallel to nearly every gnomic verse in Tamil poetry, but in many cases, the beauty, spontaneity and terseness of the Tamil stanza seem to prove its originality. (போப்: 1893: xxxix)

“அறவுரைகளைச் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் தமிழ்ப் பாடல் ஒவ்வொன்றிற்கும்கூட வடமொழியில் ஒத்த பாடலொன்றை மேற்கோள் காட்ட முடியும். ஆனால் அழகு, இயல்பான படைப்பு, சுருக்கம் ஆகிய பண்புகளை வைத்துப் பார்க்கும்போது தமிழ்ப் பாடலே மூலமென்று மெய்ப்பிக்கப்பெறும்” என்ற அவரது எடையீடு சரியானதென்று இப்பொழுது நாம் ஐயமின்றி அறிய முடிகின்றது.

திருக்குறளை மூலமாகக் கொண்டே வட நூல்களாகிய சுக்கிரநீதி, கெளடலீயம், அர்த்தசாஸ்திரம் ஆகியவை தோற்றம் பெற்றிருக்க வேண்டும் எனும் தாசரின் கூற்றும் மெய்ப்பிக்கப்படக் காணலாம்.

காமத்துப்பால் பற்றியும் அவர் அறிவித்துள்ள கருத்துக்களும் தெளிவானவை. பேரின்பத்தையும் விளக்குவதற்கே வள்ளுவர் சிற்றின்பம் பற்றிப் பேசுகிறார் என்பது அவர் முடிவு.

ஆதலின் தென் புலத்தோராம் நாயனார் காமத்துப் பாலாம் சிற்றின்ப நுகர்ச்சியை விளக்கிப் பேரின்பத்தைத் துலக்குவதற்காய். . . ஐம்புலனும் யேக