பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
5

குறள் காட்டும் வாழ்வு


திருவள்ளுவரின் பெற்றோர் பற்றிய பொய்க்கதைகள் எவ்வாறு வளர்ச்சி பெற்றன என்பதையும் திருவள்ளுவமாலையில் எவ்வாறு இடைச்செருகல் நிகழ்ந்தது என்பதையும் அயோத்திதாசர் வரலாற்று ஆதாரங்களோடு வெளியிடுகிறார்.

இந்திய அரசுப்பணியிலிருந்த எல்லிஸ் என்னும் ஆங்கில அறிஞர் 1825-ஆம் ஆண்டிற்குப்பின் ஒரு தமிழ்ச்சங்கம் ஏற்படுத்தி அதன் நூலகத்திற்குத் தமிழ் இலக்கியங்களை ஓலைச்சுவடி வடிவில் பல விடங்களிலிருந்தும் வரவழைத்துத் தந்தார். ஆரிங்டன் என்பார் இதனையறிந்து தன்னிடமிருந்த திருக்குறள் மூலம், திருவள்ளுவமாலை, நாலடியார் ஆகிய மூன்று நூல்களையும் பட்லர் கந்தப்பன் மூலம் எல்லிசுக்கு அனுப்பிவைக்க, அவர் தமிழ் வித்துவான்களாகிய தாண்டவராய முதலியாராலும் மானேஜர் முத்துசாமிப்பிள்ளை என்பவராலும் திருக்குறளை 1831 இல் அச்சிட்டு வெளியிட்டார். திருவள்ளுவ மாலையில் புதியதாய் நான்கு பாடல்களைச் சேர்த்திருப்பதைக் கந்தப்பன் எல்லிசிடம் முறையிட்டதாய்ச் சூரியோதயம் எனும் பத்திரிகை செய்தி ஒன்றை வெளியிட்டது. ஆனால் 1831 ஆம் ஆண்டு வெளிவந்த நூலில் வள்ளுவரின் பெற்றோர் பற்றிய கட்டுக்கதைகள் ஏதுமில்லை. சிலகுறட்பாக்களையும் அவற்றின் கருத்துகளை உள்ளடக்கிய வேறு தமிழ் இலக்கியப் பாக்களையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து எல்லிஸ் தம் பெயரில் வெளியிட்ட நூலிலும் வள்ளுவரின் கற்பனை வரலாறு சொல்லப்பட வில்லை. விசாகப் பெருமாள் அய்யர் என்பார் 1835