பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94 ✤ ஒரு பூர்வ பெளத்தனின் சாட்சியம்


ஆம் ஆண்டில் அச்சிட்ட திருக்குறள் நூலின் இறுதியில் ஆதி என்னும் பறைச்சிக்கும் பகவன் என்னும் பிராமணனுக்கும் ஏழு குழந்தைகள் பிறந்தனவென்றும் அவற்றுள் ஒருகுழந்தை வள்ளுவர் என்றும் அவர் ஒரு வைசியகுலப்பெண்ணை மணந்து இல்லறம் நடத்தும்போது குறளை யாத்தார் என்றும் கூறும் ஒரு சிறிய அகவற்பா சேர்க்கப்பட்டது. விசாகப்பெருமாளையரின் இளவல் சரவணப் பெருமாளையர் 1837 ஆம் ஆண்டில் வெளியிட்ட புத்தகத்தின் தொடக்கத்தில் இதனை மேலும் விரித்துப் பொருந்தாப் பொய்கள் பலவற்றையும் சேர்த்தார். அவர் அச்சிட்ட நான்காவது புத்தகத்தில் ஏழு பிள்ளைகளில் ஒவ்வொன்றும் பிறந்தவுடன் ஒரு வெண்பாப் பாடியதாக ஏழு வெண்பாக்களையும் எழுதி இணைத்துள்ளதும் காணலாம். விசாகப் பெருமாளையர் வள்ளுவர் வைசியகுலப் பெண்ணை மணந்தாரென்று சொல்லியிருக்க, அவர் தம்பியோ நாயனார் வேளாள குலப்பெண்ணை மணந்தாரென்று மாற்றம் செய்தார். மூத்தவர் நாயனார் பிறந்த இடம் மயிலையென்று மட்டும் கூறி மற்ற அறுவர் பிறந்த, வளர்ந்த இடங்களைக் கூறவில்லை. இளையவர் ஏழு குழந்தைகளுக்கும் இடங்களைச் சுட்டியதல்லாமல் வேதாளக்கதை ஒன்றையும் சேர்த்தார்.

இவ்விருவர்களுடைய பொய்க்கதைகளையும் வேதகிரி முதலியார் தாம் 1847 இல் வெளியிட்ட நூலில் விரிவாக்கம் செய்த கதை நகைப்புக்குரியது. விசாகப்பெருமாளையரின் அகவற்பா சோழநாட்டு அந்தணனுக்கு உயர் குல மனைவியால் பகவன் என்னும் மைந்தன் பிறந்து வளர்ந்து கருவூர்ப்புலைமகள் ஆதி அவனை அணுகியபோது அவளை அடித்து விரட்டிவிட்டு மறுபடியும் அவளைச்சந்தித்தபோது இருவரும் கூடி ஏழு பிள்ளைகளைப் பெற்றார் என்று பேசும் வேதகிரி வெளியிட்ட நூலில் பிரமன் ஒரு யாகம் செய்து அதில் கலைமகள் பிறக்க அவளையே மணந்து மறுபடியும் அகத்தியராகத் தோன்றி சமுத்திர கன்னிகையை மணந்து பெருஞ்சாகரனென்பாரைப் பெற, அப்பெருஞ் சாகரன் திருவாரூர்ப் புலைச்சி ஒருத்தியைக்கூடி பகவனைப் பெற்றதாகவும் அப்பகவன் பிரம்மவமிசத்துக் தவமுனிக்கும் அருண் மங்கை என்னும் பிராமணப் பெண்ணுக்கும் பிறந்து உறையூர்ப் பெரும் பறையனால் வளர்க்கப்பட்ட ஆதியை மணந்து ஏழு பிள்ளைகளைப் பெற்றதாகவும் இக்கதை விரிவாக்கம் பெற்றது. இதில் சங்கப்புலவர்கள் சிவனை அவமதித்ததால் சிவன் சங்கத்தை அழிக்கவேண்டி பிரமாவைத் திருவள்ளுவராகவும் சரஸ்வதியை அவ்வையாகவும் விஷ்ணுவை இடைக்காடராகவும் அவதரிக்கச் செய்தார் என்றும் கூறப்பட்டுள்ளது.