பக்கம்:ஒரு மாணவன் மகாத்மாவாகிறான்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1.

மரத்தடி மகாநாடு


'பேச்சாளர்கள்,நல்ல செயலாளர்களாக

இருப்பதில்லை'
-ஷேக்ஸ்பியர்.


தன்னை ஆதரிக்கும் மாணவர் குழாத்தின் மத்தியில் நின்று கொண்டிருந்த மாஜி லீடர் மூர்த்தி, ஆவேசமாகப் பேசிக்கொண்டிருந்தான்.

"நண்பர்களே! நான் இதற்கு முன்பும் உங்களுடன் பல முறை பேசியிருக்கிறேன். இன்றைய என்னுடைய நீண்ட பேச்சைக் கேட்டு நீங்கள் உணர்ச்சி வசப்பட்டு கைதட்டி ஆரவாரம் செய்தீர்கள். ஆனால் அதுமட்டும் போதாது. நான் இப்போது உங்களிடம் கூறிய திட்டத்தை நீங்கள் செயலில் காட்ட வேண்டும்.

"நீங்கள் ஹாஸ்டலில் செய்யப்போகும் ரகளைதான் நாம் தீட்டியிருக்கும் திட்டத்திற்குப் போடப்பட்டிருக்கும் பலமான அஸ்திவாரம் என்பதை மனதில் நன்றாக நிலை நிறுத்திக்கொண்டு செயல்படுங்கள்.

"நமது ஒற்றுமையும், தீரச் செயலும் சோம்பேறிச் சுப்பையாவையும், ஹாஸ்டல் வார்டனையும் கடந்து கல்லூரி முதல்வரின் கவனத்தைக் கவரவேண்டும். இந்த உணர்வோடு செயல்படுவீர்களா?":-மூர்த்தி ஆவேசமாகக் கேட்டான்.

உடனே சுற்றிலும் கூடியிருந்த அவனது கோஷ்டி மாணவர்கள் கூக்குரலிட்டு ஆமோதித்தனர்.