பக்கம்:ஒரு மாணவன் மகாத்மாவாகிறான்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12


தோதாக வாளியில் சாம்பார், ரசம், மோர், எல்லாம் நிரப்பி வைத்துக் கொண்டு வேகமாகத் தன்னுடைய பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான்.

அன்று பரிமாறும் போதே, மாணவர்களில் ஒரு கோஷ்டியினரிடையே, ஏதோமாறுதல்கள் தென்படுவதை சுப்பையா லேசாக உணர்ந்து கொண்டான். ஆகவே, அவனும் அதற்கேற்ற ஜாக்கிரதை உணர்வுடனேயே உணவு பரிமாறினான்.

அவசரப்படாமலும், அதே சமயம் துரிதமாகவும், நிதானமாகவும், குறிப்பறிந்து பறிமாறினான். சாதாரணமாக இருக்கும்போது, பாண்ட் ஷர்ட்மீது சாம்பார் பக்கெட்டோடு சரிந்து விழுந்து விட்டால் கூட சிரித்துக்கொண்டே போய் விடுவார்கள். அவர்களுக்குள் ஏதோ குழப்பமோ -'முட்' சரியில்லாமலோ இருந்தால், கர்சீப்பில் பச்சைத் தண்ணிர் தெறித்ததற்குக்கூட லஞ்ச் ஹாலை ரெண்டாக்கி அமர்க்களப்படுத்தி விடுவார்கள். இதெல்லாம் சுப்பையாவின் அனுபவப் பாடம்.

ஆனால், சுப்பையாவின் அனுபவத்திற்கும், பொறுமைக்கும் சவாலாக, எப்படியோ மூர்த்தி கோஷ்டியினர் ரகளையைத் துவக்கி விட்டனர்

பாதி சாப்பிட்டுக் கொண்டே இருந்த ரமேஷ், "ஓ!... ஓ..." என்று வாந்தி எடுப்பதுபோல் எழுந்து நின்று குமட்டிக் கொண்டே கத்தினான், "இந்தச் சாப்பாட்டை எந்த மனுஷனாவது சாப்பிடுவானா? குடலைப் பிரட்டிக் கொண்டு வாந்தி வருது. கத்தறிக்காய் கறி ஒரே கசப்பு."

ரமேஷ் கூறி முடிப்பதற்குள் ராஜு குறுக்கிட்டான். "ஏ சுப்பையா, ரசத்தில் வங்காளக் கடல் புகுந்து விட்டதா? ஒரு கரண்டி வாயில் ஊற்றிப் பாரு. உப்பு விலை மலிவு என்பதற்காக இப்படியா வாரிக் கொட்டுவது.”